நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் சென்னையிலிருந்து 21 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை என மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் 21 மாநிலங்களின் 102 தொகுதிகளில் நேற்று முன் தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது. ஒவ்வொரு தேர்தலிலும் மற்ற மாவட்டங்களை விட தலைநகரமான சென்னையில் குறைவான வாக்குகளே பதிவாகி வருகிறது. அந்த வகையில் இந்த முறையும் குறைவான சதவீதமே வாக்குப்பதிவு நடந்துள்ளது,
இதுகுறித்து பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் “சென்னை மாவட்டத்தில் 3 நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 39.25 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வடசென்னையில் 60.13 சதவீதமும், தென்சென்னையில் 54.27 சதவீதமும், மத்திய சென்னையில் 53.91 சதவீதமும் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
மொத்தமாக 3 தொகுதிகளிலும் 27 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். 21 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை. அதிகபட்சமாக ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதியில் 66.75 சதவீதமும், குறைந்தபட்சமாக ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் 52.04 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது” என தெரிவித்துள்ளார்.