நீங்கள் எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற பதில் தான் என்னிடமிருந்து வரும்," என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பில் கொந்தளித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் இன்று நிருபர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி உண்டா என்ற கேள்விக்கு பதில் அளித்தார்.
"மீண்டும் மீண்டும் இதே கேள்வியை கேட்க வேண்டாம். சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை பல இடங்களில் பதிவு செய்துவிட்டேன். எத்தனை முறை நீங்கள் இந்த கேள்வியை கேட்டாலும் இதே பதில் தான் என்னிடம் இருந்து வரும்," என்று அவர் தெரிவித்தார். "எங்களை பொறுத்தவரை மக்கள் விரோத திமுக அரசே அகற்றப்பட வேண்டும். பாஜக தவிர மற்ற கட்சிகளுக்கு தான் நான் கூட்டணிக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்தேன்," என்று கூறினார்.
"ஏற்கனவே லோக்சபா தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டோம். வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். இனிமேல் இதே போன்ற கேள்வியை கேட்க வேண்டாம்," என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதிமுகவை பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்கள் செல்வாக்கு உடைய கட்சியாக உள்ளது என்றும், "இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழகம் விளங்குவதற்கு அதிமுகவின் சிறப்பான ஆட்சியே காரணம்" என்றும், அவர் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.