Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் பிதற்றிய விடியா திமுகவின் பொம்மை முதலமைச்சர்: ஈபிஎஸ்

Advertiesment
EPS Stalin

Mahendran

, வியாழன், 23 ஜனவரி 2025 (15:45 IST)
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் பிதற்றிய விடியா திமுகவின் பொம்மை முதலமைச்சர் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் அவலங்களை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் சுட்டிக் காட்டினால் முதலமைச்சரும், நிதி அமைச்சரும், அவர்களுக்கு ஏவல் புரியும் பல கட்சி தாவிய செந்தில் பாலாஜியும், என்மீது தேவையற்ற வன்மத்தைக் கக்குகிறார்கள். இதிலிருந்து, மக்கள் பணியில் நான் சரியான பாதையில்தான் பயணிக்கிறேன் என்பதை உணர்கிறேன்.
 
22.1.2025 அன்று சிவகங்கையில் நடைபெற்ற அரசு விழாவில், விடியா திமுக-வின் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது, 'திண்ணையில் உட்கார்ந்துகொண்டு வெட்டிப்பேச்சு பேசுவது போன்று, வாய்க்கு வந்தபடி எதிர்க்கட்சித் தலைவர் பேசலாமா?' என்று பேசியுள்ளார்.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஒவ்வொரு ஊரிலும் திண்ணையில் அமர்ந்து போட்டோ ஷூட் நடத்தியதையும்; மனு கொடுப்பவர் ஆணா, பெண்ணா என்று கூடப் பார்க்காமல், மனுதாரர் என்ன கூற முயல்கிறார் என்பதைக்கூட கேட்காமல், எழுதிக்கொடுத்த நாடக வசனத்தைப் பேசி மக்களிடையே ஜோக்கராக காட்சியளித்ததையும், பொதுமக்களிடம் புகார் பெட்டியில் மனுக்களைப் போடவைத்து, பிறகு புகார் பெட்டியைப் பூட்டி, திமுக ஆட்சிக்கு வந்ததும் குறைகளுக்கு தீர்வு காணப்படும் என்று கூறிவிட்டு, புகார் கொடுத்தவர்கள் எப்போது தலைமைச் செயலகம் வந்தாலும் முதலமைச்சர் அறையில் தன்னை நேரடியாகப் பார்க்கலாம் என்று நாடகமாடியதை தமிழக மக்கள் இன்னும் மறக்கவில்லை.
 
புகார் பெட்டியில் போடப்பட்ட மனுக்களின் நிலை என்னவென்று இன்றுவரை தெரியவில்லை. ஒருவேளை புகார் பெட்டியின் சாவி தொலைந்துவிட்டதா எனறு மக்கள் கேள்வி எழுப்பியது ஞாபகம் இல்லையா?'திமுக தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நான் பேசியதாகவும், அது வெட்டிப் பேச்சு' என்றும் ஸ்டாலின் பேசியுள்ளார்.  
 
திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனறு நான் பேசினால், அது வெட்டிப் பேச்சாம். 2021 தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, நிறைவேற்ற முடியாத சுமார் 525 தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றது யார்?அவற்றில் சுமார் 53 வாக்குறுதிகள், மத்திய அரசை வலியுறுத்தி முயற்சிகளை மேற்கொள்ளுதல் என்று குறிப்பிட்டது யார்? ஆட்சிக்கு வந்து 44 மாதங்கள் ஆகியும் தமிழக மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் மற்றும் பணப் பயன் அளிக்கக்கூடிய கீழ்க்கண்ட ஒருசில முக்கிய வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை
 
நீட் தேர்வு ரத்து; குடும்ப அட்டைக்கு கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை; பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும்; தமிழக மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் ரத்து; 100 நாள் ஊரக வேலை நாட்கள் 150-ஆக அதிகரிக்கப்படும்; எரிவாயு சிலிண்டர் ரூ. 100 மானியம்; பெட்ரோல், டீசல் விலை குறைப்பு; மாதந்தோறும் மின்கட்டண கணக்கீடு; பகுதிநேர ஆசிரியர் பணி நிரந்தரம்; அனைத்து உணவுப் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை; நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம்; அரசு பொதுத்துறை நிறுவனங்கள் குழு அமைத்து 3 மாதங்களுக்குள் சீரமைக்கப்படும்; மாநில நிர்வாகத் தீர்ப்பாயம் அமைக்கப்படும்; முதியோர் உதவித் தொகை 1500 ஆக உயர்த்தப்படும்,  பாலியல் கொடுமை – பாதிக்கப்பட்டோர் விவரம் ரகசியமாக வைக்கப்படும்; தனிப் பிரிவுகள் மூலம் விசாரணை மேற்கொள்ளப்படும்...என்று  நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
 
2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போதும், பல்வேறு இடங்களில் பேசும்போதும், திமுக-வின் 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகள் 90 சதவீதத்திற்கும்மேல் நிறைவேற்றப்பட்டுவிட்டன என்று பேசிய ஸ்டாலின், நேற்று சிவகங்கையில் பேசும்போது, திமுக-வின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம் என்றும், இன்னும் 116 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் பேசியுள்ளார்.
 
இதிலிருந்தே முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் ஸ்டாலினின் பொய்முகம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. நாங்கள் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் மக்களிடம் உண்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய ஜனநாயகக் கடமையின்படி, திமுக-வின் 525 தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற சட்டமன்றத்திலும், அறிக்கைகளிலும், பேட்டிகளின்போதும் அழுத்தம் கொடுத்தோம்.எதிர்க்கட்சியாகிய நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திய பிறகு, 28 மாதங்கள் கழித்து, பல்வேறு நிபந்தனைகளுடன் மகளிர் உரிமைத் தொகையை வழங்கிய அரசுதானே இந்த ஸ்டாலின் மாடல் அரசு. திமுக-வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், கர்நாடகாவில் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மகளிர் உரிமைத் தொகையை உடனே வழங்கினார்கள். இதை ஸ்டாலின் உணராதது ஏனோ? என எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிளி ஜோசியம் பாத்தாதானே புடிப்பீங்க! செம ட்ரிக்காய் எலி ஜோசியத்துக்கு மாறிய ஜோசியர்கள்!