குடியுரிமை சட்டத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் பொய்யான செய்திகளை கூறி மக்களை ஏமாற்றுவதாக முதல்வர் பேசியுள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை வண்ணாரப்பேட்டயில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய திமுக உறுப்பினர் மனோ தங்கராஜ் குடியுரிமை சட்டத்தால் சிறுபான்மையினர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ”தமிழகத்தில் சிஏஏவால் யாரும் பாதிக்கப்படவில்லை. சிறுபானமையினர் பாதிக்கப்பட்டதாக பொய்யான செய்திகளை மக்களிடம் கூறி அவர்களை ஏமாற்றாதீர்கள். தமிழகத்தில் சிஏஏவால் பாதிக்கப்பட்டதாக ஒரு சிறுபான்மையினரையாவது உங்களால் காட்ட முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.
மேலும் ”அப்படி யாராவது பாதிக்கப்பட்டிருப்பதாக நிரூபணம் ஆனால் அரசு அவர்களுக்காக நடவடிக்கை எடுக்கும். இதுபோன்ற அவதூறான செய்தியை பரப்பி அமைதியாக வாழும் மாநிலத்தில் குந்தகம் விளைவிக்காதீர்கள்” என்று கடிந்து கொண்டுள்ளார்.