இரட்டை இலை யாருக்கு சொந்தம் என்ற உரிமை பிரச்சனை, இந்திய தேர்தல் ஆணையத்தின் முன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
ஆர்.கே. நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என சசிகலா அணியின் தினகரனும், ஓபிஎஸ் அணியின் மதுசூதனனும் கூறி வருகின்றனர். இரண்டு அணியில் எந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படும் என்ற பஞ்சாயத்து இன்று முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.
சசிகலாவின் பொதுச்செயலாளர் தேர்வு செல்லாது என்ற தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் கொடுக்கப்பட்ட புகாரில் இரு தரப்பினரும் பல்வேறு விளக்கங்கள் அளித்த பின்னரும் தேர்தல் ஆணையம் இன்று இரு தரப்பினரையும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்க உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் மட்டுமில்லாமல், பொதுமக்களும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்த இரட்டை இலை விவகாரத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் பிரபல வழக்கறிஞர் ஷரீஷ்சால்வே ஆஜராகி தேர்தல் ஆணையத்தில் வாதாட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சசிகலா அணி சார்பில் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி வாதாடுகிறார்.
அப்போது, சசிகலாவை பொதுச்செயலாளராக நியமனம் செய்தது குறித்து பிறகு விவாதிக்கலாம். தற்போது, இரட்டை இலை சின்னத்தை பற்றி மட்டும் பேசுங்கள் என்று ஓ.பி.எஸ் அணி மற்றும் தினகரன் தரப்பு ஆகியோரிடம் தேர்தல் ஆணையம் கூறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.