மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் மின் கட்ட உயர்வுக்கு பின் 100 யூனிட் இலவச மின்சாரம் உண்டா என்பது குறித்த விளக்கத்தை மின்வாரியம் அளித்துள்ளது.
ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின் கட்டணம் உயர்வு என்று தமிழக அரசின் மின்சார வாரியம் அறிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் மின் கட்டண உயர்வுக்கு பின் இலவச நூறு யூனிட் கிடைக்குமா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு இருந்த நிலையில் இது குறித்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அதேபோல் குடிசை இணைப்புகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிபாட்டு தலம், ஒரு சில குறிப்பிட்ட தொழிற்சாலைகளுக்கு மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோருக்கு மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூபாய் ஐந்து வரை மட்டுமே உயரும் என்றும் மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
மின்கட்டணம் உயர்ந்தாலும் இலவச யூனிட்டுகளுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்ற தகவல் பொதுமக்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது.
Edited by Siva