Publish Date: Mon, 29 Apr 2019 (09:35 IST)
Updated Date: Mon, 29 Apr 2019 (09:36 IST)
இடைத்தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றால் இன்னும் 25 நாட்களுக்குள் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை தான் கொண்டுவருவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19 ஆம் தேதி நடக்க இருக்கிறது. ஏற்கனவே நடந்த 18 தொகுதி இடைத்தேர்தல்களோடு சேர்த்து மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றன.
அந்த முடிவுகளை எதிர்பார்த்து தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் ஆவலாகக் காத்திருக்கின்றனர். ஒருவேளை இடைத்தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது. அதற்காக திமுகவினர் இடைத்தேர்தல் பணிகளில் மும்முரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் சூலூர் தொகுதி வேட்பாளர் பழனிச்சாமியை அறிமுகப்படுத்தி பேசிய திமுக பொருளாளர் துரை முருகன் ‘4 தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெற வையுங்கள். இந்த ஆட்சியை நான் 25 நாட்களுக்குள் மாற்றிக் காட்டுகிறேன். சட்டசபையில் நான் உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டே வெடி வெடிக்கும்படி செய்கிறேன். நான் கலைஞரிடம் அரசியல் பாடம் கற்றவன். இன்னும் மூன்று திங்களுக்குள் ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக அமர்வார்.’ எனத் தெரிவித்துள்ளார்.