வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசாரின் ஜீப்பை, மது போதையில் இருந்த ஒரு மர்ம நபர் ஒருவர் ஓட்டி சென்ற விவகாரம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவெற்றியூரில் நேற்று மதியம், போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வந்த ஜீப் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு போதை ஆசாமி, ஜீப்பை ஓட்டி சென்று விட்டார். அவர் குடிபோதையில் இருந்ததால், சாலையில் தாறுமாறாக ஜீப்பை ஓட்டிச் சென்றார். இதைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். அதன்பின், சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி ஜீப் நின்றுவிட்டது.
உடனே அங்கிருந்த பொதுமக்கள், அந்த போதை ஆசாமியை பிடித்தனர். அதற்குள், ஜீப்பை துரத்தியபடி போக்குவரத்து போலீசாரும் அங்கு வந்து சேர்ந்தனர்.
விசாரணையில், வண்டியை ஓட்டி சென்றவர் புருஷோத்தமன்(36) என்பது தெரியவந்தது. மேலும், அவர் திருவெற்றியூர் போக்குவரத்து போலீசில் காவலராக பணியாற்றியவர் என்பதும், பணியின் போது மது போதையில் இருந்ததால் கடந்த 8 மாதங்களாக பணி இடைநீக்கம் செய்யபட்டிருந்தவர் என்பதும் தெரிய வந்தது.
போதை ஆசாமி, போலீசாரின் ஜீப்பை ஓட்டிச்சென்ற சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.