Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி தீர்ப்பு யாருக்கு சாதகமாக வேண்டுமானாலும் வரலாம்: டாக்டர் ராமதாஸ் கருத்து

Webdunia
சனி, 9 நவம்பர் 2019 (09:21 IST)
அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்னும் சில நிமிடங்களில் வெளிவரவிருக்கும் நிலையில் இந்த தீர்ப்பு எப்படி இருக்குமோ என்று நாடு முழுவதிலும் உள்ள மக்கள் பரபரப்பில் உள்ளனர். இந்த நிலையில் பிரதமர், மாநில முதல்வர்கள், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் நீதிமன்றம் தரும் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அந்த வகையில் பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
 
இந்தியாவில் பல பத்தாண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் அயோத்தி ராமஜென்ம பூமி - பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. இந்தத் தீர்ப்பை அனைவரும் மதித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.
 
அயோத்தி நில வழக்கு பல ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போதிலும், ஓய்வுபெறவிருக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்கள் தான் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியலமைப்பு சட்ட அமர்வை அமைத்து, 40 நாட்கள் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி, அனைத்து தரப்பினரின் வாதங்களையும், நியாயங்களையும் கேட்டறிந்துள்ளார். இத்தகைய விசாரணைக்கு முன்பு கூட இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் நோக்குடன் நீதிபதிகள், மதத் தலைவர்கள் அடங்கிய குழுவை அமைத்தார். அக்குழுவின் முயற்சி பயனளிக்காவிட்டாலும், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக இரு தரப்பினரும் உறுதி அளித்ததைத் தொடர்ந்து தான் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட உள்ளது. வழக்கின் தீர்ப்பு எத்தகையதாக இருந்தாலும் அதை மதித்து ஏற்றுக் கொள்ள இரு தரப்பினரும் தயாராகி விட்டனர் என்பதைத் தான் அண்மைக்கால நிகழ்வுகள் காட்டுகின்றன.
 
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர்களை இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசியிருப்பது, வழக்கின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் இந்து மற்றும் இஸ்லாமியத் தலைவர்கள் தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பது அவர்களின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. இது வரவேற்கப்பட வேண்டிய, பாராட்டப்பட வேண்டிய அணுகுமுறையாகும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல மாநிலங்களின் முதலமைச்சர்களும் இதே போன்ற வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
 
அயோத்தி நில வழக்கின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வேண்டுமானாலும் வரலாம். இரு சகோதரர்களுக்கு இடையிலான சொத்து வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு எவ்வாறு அவர்களுக்கு இடையிலான உறவை சிதைத்து விடாதோ, அதேபோல் இந்த வழக்கின் தீர்ப்பும் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலான உறவுக்கும், ஒற்றுமைக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தி விடக் கூடாது. அதற்கு எவர் ஒருவரும் இடம் கொடுத்து விடக் கூடாது. அது தான் நமது தாயகமான இந்தியாவை வலுப்படுத்தும்.
 
அயோத்தி வழக்கு தொடர்பாக அவசரப்பட்டு கருத்து தெரிவிப்பதோ, வதந்திகளை பரப்புவதோ கூடாது. முகநூல், வாட்ஸ்-ஆப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அடுத்த சில நாட்களுக்கு சர்ச்சைக்குரிய செய்திகளை பரப்புவதைக் கைவிட வேண்டும். காட்சி ஊடகங்களிலும் அயோத்தி நில தீர்ப்பு குறித்த விவாதங்களை தவிர்ப்பது நலம் பயக்கும். அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு எந்த ஒரு தரப்புக்கும் வெற்றியோ, தோல்வியோ அல்ல. அது நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு நிலச் சிக்கலுக்கு முன்வைக்கப்படும் தீர்வாகவே பார்க்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு கிடைத்த ஒற்றுமையாகவே பார்க்கப்பட வேண்டும். இந்தியா முழுவதும் இந்த தீர்ப்பை முன்வைத்து சிறு அளவிலான மோதல்களும், வாக்குவாதங்களும் கூட நிகழாமல் இருப்பதை நாம் உறுதி செய்வோம்.
 
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments