Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கு ஒரே ஆண்டில் மூடுவிழாவா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்..!

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (10:28 IST)
தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கு ஒரே ஆண்டில் மூடுவிழாவா? உடனடியாக தேர்வு அட்டவணையை அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: 
 
தமிழ்நாட்டில் 11-ஆம் வகுப்பு பயிலும், அனைத்து பள்ளிகளின் மாணவர்களும் பங்கேற்கும் வகையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வை இந்த ஆண்டு நடத்துவதற்கான அறிவிப்பு இன்று வரை வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு என்ற பெயரில் தமிழ் இல்லாத பிற பாடங்களுக்கான திறனாய்வுத் தேர்வு செப்டம்பர் 23-ஆம் நாள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அதனால், தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு நடப்பாண்டில் நடத்தப்படாமல் கைவிடப்படுமோ? என்ற அச்சம் தமிழார்வலர்களுக்கும், தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கும்  ஏற்பட்டிருக்கிறது.
 
தமிழக அரசு நடப்பாண்டில் புதிதாக அறிவித்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கும்,  கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட தமிழ் மொழி இலக்கியத் திறனறித்  தேர்வுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை.  திறனறித் தேர்வு தமிழ்மொழிக்கு மட்டும் நடத்தப்படும்; ஒரு மாணவருக்கு மாதம் ரூ.1500 வீதம் இரு ஆண்டுகளுக்கு ரூ.36,000 பரிசு மொத்தம் 1500 பேருக்கு  வழங்கப்படும்; இதில் அனைத்துப் பள்ளிகளின் 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்க முடியும். திறனாய்வுத் தேர்வு தமிழ் தவிர்த்த பிற பாடங்கள் அனைத்திற்கும்  சேர்த்து நடத்தப்படுவதாகும்; இத்தேர்வில் அரசு பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டும் தான் பங்கேற்க முடியும்; ஒரு மாணவருக்கு ஓராண்டுக்கு ரூ.10,000 வீதம் ஒரு ஆண்டுகளுக்கு  ரூ.20,000 பரிசு  மொத்தம் 1000 பேருக்கு மட்டும் வழங்கப்படும். அதனால் திறனறித் தேர்வுக்கு திறனாய்வுத் தேர்வு மாற்று அல்ல.
 
அப்படியானால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கான அறிவிப்பு, நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தும் வெளியிடப்படாதது ஏன்? என்பது தான் என்னைப் போன்ற தமிழார்வலர்களின் வினா ஆகும். தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு என்பது மிகவும் அற்புதமான முயற்சி ஆகும். அதன் மூலம் மாணவர்களின் தமிழார்வம் ஊக்குவிக்கப்பட்டது. 1500 மாணவர்களுக்கு இரு ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட ரூ.36,000 பரிசுத் தொகை அவர்களின் உயர்கல்விக்கு பெரிதும் உதவியாக இருந்தது. இந்தத் தேர்வு தொடர்ந்து நடத்தப்பட்டால் மாணவர்களிடம் தமிழ் மீதான ஆர்வமும், பற்றும்  அதிகரிக்கும்.
 
எங்கும் தமிழ்... எதிலும் தமிழ் என்பது தான் தமிழக அரசின் முழக்கமாக உள்ளது. தமிழ் மொழியை வளர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் அரசு, தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வை தொடர்ந்து நடத்தாமல், ஒரே ஆண்டுடன் மூடுவிழா நடத்தினால், அது தமிழ் மொழிக்கு எதிரான செயலாகவே அமையும்.  தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வும்  தொடர்ந்து நடத்தப்பட  வேண்டும். அதற்கான அறிவிப்பை தமிழக அரசின் தேர்வுகள் துறை உடனடியாக  வெளியிட வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments