Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தூக்கு தண்டனை முடிவை எதிர்த்து மேல்முறையீடு கூடாதா? டாக்டர் ராமதாஸ் ஆவேசம்..!

ramadoss
, வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (12:41 IST)
தூக்கு தண்டனை தொடர்பான குடியரசுத் தலைவரின்  முடிவை எதிர்த்து மேல்முறையீடு கூடாதா?  மக்களின் உயிர்வாழும் உரிமையை பறிக்கக் கூடாது என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
குற்றவழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின்  கருணை மனு மீது,  குடியரசுத் தலைவர் எந்த முடிவை எடுத்தாலும் அதை அனைவரும்  ஏற்றுக்கொள்ள வேண்டும்; குடியரசுத் தலைவரின் முடிவு குறித்து வினா எழுப்பக் கூடாது; உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாது என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக இந்திய  குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்த முன்வரைவின்  473-ஆம் பிரிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு  விபரீதமானது. குற்றவழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட அப்பாவிகள் மற்றும் மனம் திருந்தி வாழ நினைப்பவர்களின் வாழ்வுரிமையக் பறிக்கும்  செயலாகும்.
 
குற்றவழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கடைசி நம்பிக்கையாக இருப்பது குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்யப்படும் கருணை மனுக்கள் தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-ஆம் பிரிவின்படி, ஒருவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. ஆனால், இந்த அதிகாரத்தை பல தருணங்களில் குடியரசுத் தலைவர்கள் முறையாக பயன்படுத்துவதில்லை; பல்வேறு தருணங்களில் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதை பல ஆண்டுகள் தாமதப்படுத்தி விட்டு, இறுதியில் தண்டனையை உறுதி செய்கிறார்கள். சில நேரங்களில்  அரசியல் சூழலை பொறுத்தும் குடியரசுத் தலைவர்கள் முடிவெடுக்கின்றனர். அவர்களின் முடிவை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.
 
கருணை மனுக்கள் மீதான குடியரசுத் தலைவரின் முடிவே இறுதியானது என்று புனிதப்படுத்துவதன் மூலம், குற்றவழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களின் வாழும் உரிமையை  மத்திய அரசு பறிக்க நினைக்கிறது. பல தருணங்களில் குடியரசுத் தலைவர்களால் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் போது அதை எதிர்த்து  செய்யப்படும் மேல்முறையீடுகளை போது, அதை கனிவுடன் பரிசீலிக்கும் உச்சநீதிமன்றம், தண்டிக்கப்பட்ட மனிதர்களின் தண்டனையை குறைத்தோ, ரத்து செய்தோ ஆணையிடுகின்றன. அண்மைக்காலங்களில் கூட , தூக்குமேடைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பலர்  உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் காப்பாற்றப்பட்டனர்.  இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் இத்தகைய வாய்ப்பு மக்களிடமிருந்து பறிக்கப்படக் கூடாது.
 
உலகில் கிட்டத்தட்ட 150 நாடுகளில் சாவுத்தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. இந்தியாவிலும் சாவுத் தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். சாவுத்தண்டனை ஒழிப்பை நோக்கி முன்னேற வேண்டிய நாம்,  தூக்குத் தண்டனையிலிருந்து குற்றவாளிகளை நீதிமன்றத்தின் மூலம் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகளை பறிப்பதை நோக்கி பின்னேறக் கூடாது. 
 
தூக்கு தண்டனையை குறைக்கக் கோரும் கருணை மனுக்கள் மீது  குடியரசுத் தலைவர்கள் முடிவெடுப்பதில் ஏராளமான அரசியல் இருக்கும் நிலையில், அவர்களின் முடிவே இறுதியானதாக இருக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திடம் தான் இருக்க வேண்டும். எனவே, இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் இது தொடர்பாக செய்யப்படவுள்ள திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ் விடுதலையை எதிர்த்து தாமாக முன் வந்து வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!