Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலா..ஓ.பி.எஸ்...பி.எச்.பாண்டியன்..விஜய பாஸ்கர் - யார் கூறுவது உண்மை?

Advertiesment
சசிகலா..ஓ.பி.எஸ்...பி.எச்.பாண்டியன்..விஜய பாஸ்கர் - யார் கூறுவது உண்மை?
, செவ்வாய், 7 மார்ச் 2017 (12:58 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக ஓ.பி.எஸ், சசிகலா உள்ளிட்ட பலரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என பா.மா.க நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


 

 
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் எழுப்பிய ஐயங்களுக்கு விளக்கமளிப்பதாகக் கூறி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்த ஐயம் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேலின் விளக்கத்திற்கு பிறகு 100 மடங்காக அதிகரித்தது என்றால், சுகாதாரத்துறை செயலாளரின் விளக்கத்திற்குப் பிறகு 1000 மடங்காக அதிகரித்திருக்கிறது.
 
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையிலும், அவரது மரணத்திலும் மர்மம் இருப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்த விளக்கங்களை மட்டுமே சுகாதாரத்துறை செயலாளர் அளித்திருக்க வேண்டும். ஆனால், அவரோ அந்த அறிக்கைகளில் சசிகலா தரப்புக்கு சாதகமாக உள்ள அம்சங்களை மட்டும் வெளியிட்டு, ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்று தன்னைத்தானே நீதிபதியாக நினைத்துக் கொண்டு தீர்ப்பு வழங்கியிருக்கிறார்; சசிகலா தரப்புக்கு நற்சான்றிதழ் அளித்திருக்கிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த போது அவரது உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து தமிழக அரசின் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சரோ அல்லது செயலாளரோ தான் மக்களுக்கு விளக்கமளித்திருக்க வேண்டும். ஆனால், ஜெயலலிதா மருத்துவம் பெற்ற 75 நாட்களில் அமைச்சர் விஜயபாஸ்கரோ, செயலாளர் இராதாகிருஷ்ணனோ ஒருமுறை கூட மருத்துவ அறிக்கையை வெளியிடவில்லை. ஆனால், இப்போது யாரையோ காப்பாற்ற அவசரமாக அறிக்கை வெளியிடுவது ஏன்?
 
கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு வந்த அவசர அழைப்பை ஏற்று அப்பல்லோ மருத்துவமனையின் அவசர ஊர்தி போயஸ்தோட்ட இல்லத்திற்கு சென்ற போது, அங்கு ஜெயலலிதா மூச்சு பேச்சின்றி மயங்கிக் கிடந்தார் என்றும், இதையடுத்து உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் இராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். ஏழரை கோடி தமிழக மக்களின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, மயக்கமடையும் நிலையில் தான் வீட்டில் வைக்கப்பட்டிருந்தார் என்பதிலிருந்தே அவரது பரிதாப நிலையை உணர முடிகிறது. இது அவரது மரணம் குறித்த மர்மங்களை அதிகரிக்கிறது.
 
ஜெயலலிதாவுக்கு மூச்சுத் திணறல், நோய்த்தொற்று, ஆஸ்துமா மூச்சுக்குழாய் அழற்சி, தைராய்டு பிரச்சினை, உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பிரச்சினைகள் நீண்டகாலமாக இருந்து வந்ததாகவும் அப்பல்லோ மருத்துவ ஆய்வில் தெரியவந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். இவ்வளவு நோய்களால் ஜெயலலிதா பாதிக்கப்பட்டிருந்ததாக தமிழக அரசே ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், வெறும் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாட்டால் தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று முதல் நாளும், ஜெயலலிதா குணமடைந்து விட்டார்; இயல்பான உணவை உட்கொள்ளத் தொடங்கி விட்டார் என்று அடுத்த நாளும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது ஏன்? அதுபோன்று அறிக்கை வெளியிடும்படி மருத்துவமனை நிர்வாகத்தை நிர்பந்தித்தவர்கள் யார்? ஜெயலலிதா சிகிச்சை காலத்தில் மருத்துவமனையில் முகாமிட்டிருந்த சுகாதாரத்துறை செயலருக்கு இதுவெல்லாம் தெரியாதா?
 
அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக் காரணமாக ஜெயலலிதாவின் உடல்நிலை தேறியதாகவும், ஒருகட்டத்தில் காவிரி பிரச்சினை உள்ளிட்ட சில முக்கிய விஷயங்கள் குறித்து அரசு அதிகாரிகளுடனும், பிற விஷயங்கள் பற்றி குடும்பத்தினருடனும் விவாதித்ததாகவும் இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆலோசனை நடத்தும் அளவுக்கு அவரது உடல்நிலை தேறியிருந்தால் அவரை சந்திக்க தமிழக ஆளுனருக்கும், மத்திய அமைச்சர்கள், அண்டை மாநில ஆளுனர்கள், முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட எவருக்கும் அனுமதி அளிக்கப்படாதது ஏன்? ஜெயலலிதாவை எவரும் சந்திக்க விடாமல் தடுத்தது யார்? அவ்வாறு தடுக்கும் அளவுக்கு அவர்களின் திட்டம் என்ன?
 
உடல்நலம் தேறி வந்த ஜெயலலிதாவுக்கு 04.12.2016 அன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அடுத்த ஒருமணி நேரத்திற்குள் அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்ட போதிலும் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், உயிர்காக்கும் கருவிகளின் கட்டுப்பாட்டில் அவரை வைத்திருப்பதால் பயனில்லை என்பது குறித்து அப்போது முதல்வரின் பொறுப்புகளை கவனித்து வந்த ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர்,தம்பித்துரை, சசிகலா, தலைமைச்செயலர் ராமமோகன்ராவ், மற்றும் சுகாதாரச் செயலாளரான தம்மிடமும் தெரிவிக்கப்பட்டதாகவும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அவர்களும் நிலைமையை புரிந்து கொண்டு வழக்கமான நடைமுறைகளை செய்யும்படி மருத்துவர்களை கேட்டுக்கொண்டதாகவும், அதனடிப்படையில் ஜெயலலிதா மறைந்த செய்தி அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
 
சுகாதாரத்துறை செயலாளர் கூறுவதற்கும், அவரது அறிக்கையில் இடம் பெற்றுள்ள மற்றவர்கள் கூறுவதற்கும் இடையே ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. அவை ஐயங்களை அதிகரிக்கின்றன.
 
1. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து என்னிடம் எதுவுமே தெரிவிக்கப்படவில்லை என்கிறார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை நிறுத்தும் முடிவே பன்னீர்செல்வத்திடம் விவாதிக்கப்பட்டு தான் எடுக்கப்பட்டது என்கிறார் இராதாகிருஷ்ணன் இருவரில் எவர் சொல்வது உண்மை?
 
2. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை நிறுத்தும்படி மருத்துவர்களுக்கு உத்தரவிட்டவர் யார்? என்று பன்னீர்செல்வம் அணித் தலைவர்களில் ஒருவரான பி.எச்.பாண்டியன் வினா எழுப்பினார். பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோர் சொல்லித்தான் அந்த முடிவு எடுக்கப்பட்டது என சுகாதாரத் துறை செயலாளர் கூறுகிறார். இதற்கு ஓ.பன்னீர்செல்வத்தின் பதில் என்ன?
 
3. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் நீரிழிவு நோயாளி ஜெயலலிதா 3 இனிப்புகளை சாப்பிட்டதாகவும், அதை தாம் பார்த்ததாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருக்கிறார். இதற்கு அரசின் பதில் என்ன?
 
4. ஜெயலலிதாவை கண்ணாடி வழியாக தாம் பார்த்ததாகவும், அவரும் தம்மைப் பார்த்து இரட்டை இலை சின்னம் போன்று கை விரல்களை காட்டியதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறுகிறார். இதற்கு அரசின் பதில் என்ன?
 
5. ஜெயலலிதாவின் மரணம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்கப்படும் என்று முதலமைச்சராக இருந்த போது கூறிய ஓ.பன்னீர்செல்வம் அதை செய்யாதது ஏன்?
 
6. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து பன்னீர்செல்வத்திடம் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் உண்மைக்கு மாறான தகவல்களை கூறிவருவதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றஞ்சாற்றியிருக்கிறார். பன்னீர்செல்வம் கூறுவது பொய் என்றால் அவர் மீது தமிழக அரசு வழக்குத் தொடராதது ஏன்?
 
7. ஜெயலலிதாவை அவரது குடும்பத்தினர் சந்தித்து பேசியதாக இராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். அவர் குடும்பம் என குறிப்பிட்டிருப்பது யாரை? அவர்கள் ஜெயலலிதாவுக்கு என்ன உறவு?
 
இந்த வினாக்களுக்கெல்லாம் விடை அளிக்கப்பட்டால் தான் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் விலகும்.ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது மரணத்தில் பெரிய மர்மம் இருப்பது உண்மை. இதில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருதரப்புக்குமே பங்கு இருக்கிறது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து இவர்களுக்கு மிகவும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாற்றி தப்பிக்கப் பார்க்கிறார்கள். இருதரப்பும் மாற்றி மாற்றி பேசி மக்களை ஏமாற்றுகின்றனர். இதில் உண்மை கொண்டு வருவதற்காக ஜெயலலிதா மர்மமான முறையில் இறந்ததாக வழக்குப் பதிவு செய்து, அதை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
 
அதுமட்டுமின்றி இவ்விஷயத்தில் முன்னுக்குப்பின் முரணாக பேசி வரும் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், பி.எச். பாண்டியன், பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், முன்னாள் தலைமைச் செயலாளர் இராமமோகன்ராவ், சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும். தங்களிடம் தவறில்லை என்றும், உண்மையானவர்கள் என்றும் நம்பினால் அவர்களே தானாக முன்வந்து இச்சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்” என அந்த அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாற்றுத்திறானாளிகளை இழிவுப்படுத்திய பேச்சு: ராதாரவி மன்னிப்பு கேட்க மறுப்பு