சென்னை கிண்டி மருத்துவமனையில் பணிபுரியும் பாலாஜி என்ற மருத்துவரை விக்னேஷ் என்ற வாலிபர் சரமாரியாக கத்தியால் குத்திய நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இது குறித்து ஏற்கனவே முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து பதிவு செய்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.
மருத்துவரை கத்தியால் குத்தியவர் கடந்த ஆறு மாதங்களாக இங்கு தான் தாயாருக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார் என்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் சொன்னதை கேட்டு தான் இந்த கத்திக்குத்து சம்பவத்தில் சம்பவத்தில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கத்தியால் குத்திய விக்னேஷ் என்ற இளைஞரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்துள்ளனர் என்றும் அவர் மீது கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை முதல்வர் உதயநிதி உறுதி செய்தார்.
மேலும் மருத்துவர் பாலாஜிக்கு இடது கழுத்து பகுதியில் ஒரு காயம், இடது தோள்பட்டையில் ஒரு காயம், இடது காது மடலில் ஒரு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்
மேலும் மருத்துவரின் குடும்பத்தினர் தற்போது மருத்துவமனையில் தான் இருப்பதாகவும் அவர்களை நேரில் சந்தித்து தான் ஆறுதல் கூறியதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.