போதைப்பொருள் கடத்தியவர்களுடன் தொடர்பில் இருந்ததாக நடிகர் மன்சூர் அலிகானின் மகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக அறியப்படும் மன்சூர் அலிகான், தமிழ் தேசிய புலிகள் என்ற கட்சியையும் தொடங்கி நடத்தி வருகிறார். இவரது மகன் அலிகான் துக்ளக் ஒரு படத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் நேற்று போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக துக்ளக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகனை பார்க்க மன்சூர் அலிகான் வந்தார். அப்போது மகனிடம் பிக்பாஸ் வீட்டிற்கு போவது போல நினைத்து சிறைச்சாலைக்கு சென்று வா. நிறைய புத்தகங்களை படி என அறிவுரை வழங்கியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர் “தமிழகத்தில் போதைப்பொருள் எங்கிருந்து கிடைக்கிறது? இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
எனது மகனின் செல்போன் எண் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் குற்றவாளிகள் செல்போனில் இருந்துள்ளது. அதை வைத்து கைது செய்துள்ளார்கள். போதைப்பொருளை ஒழிக்க நான் சரக்கு என்ற படம் எடுத்தேன். அந்த படத்தை வெளியிட தியேட்டர் கூட கிடைக்கவில்லை. ஓடிடியில் கூட வெளியிட விடாமல் தடுப்பது எந்த சக்தி? நேரம் வரும்போது பொங்குவேன்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K