Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆடம்பரத்தால் முகம் சுளிக்க வைத்துவிடாதீர்கள்! - ஸ்டாலின் தொண்டர்களுக்கு எச்சரிக்கை

ஆடம்பரத்தால் முகம் சுளிக்க வைத்துவிடாதீர்கள்! - ஸ்டாலின் தொண்டர்களுக்கு எச்சரிக்கை
, ஞாயிறு, 29 ஜனவரி 2017 (13:44 IST)
ஆடம்பர வெளிப்பாடுகள் அதிகமாகி முகம் சுளிக்கும் அளவுக்கு அமைந்துவிடக் கூடாது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


 

இது குறித்து தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், ”மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டத்திற்காக அண்மையில் கோவை மாநகருக்கு நான் சென்ற போது வழிநெடுக ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதுபோலவே வெளியூர் நிகழ்வுகள் பலவற்றிலும் காண்கிறேன்.

உங்களில் ஒருவனாக நான் உங்களை சந்திக்க வரும் போது, அன்பின் மிகுதியால் வழிதோறும் நீங்கள் வைக்கின்ற வரவேற்பு பேனர்களையும், அதில் உங்களின் உள்ளத்து வெளிப்பாடுகளையும் காண்கிறேன். தலைமை மீது நீங்கள் கொண்டுள்ள உறுதியான பிடிப்பும், கழகத்தின் தொண்டன் என்கிற உங்களின் பெருமிதமும் அந்த பேனர்களில் இடம்பெறும் படங்களிலும், வாக்கியங்களிலும் அறிய முடிகிறது.

என் படத்துடன் உங்கள் படங்களையும் ஒன்றாக இடம்பெறச் செய்து நமது இயக்கக் குடும்பத்தில் தலைமைக்கும் தொண்டர்களுக்கும் உள்ள நெருக்கத்தைக் காட்டும் உங்களின் எண்ணத்தை மதிக்கிறேன்.

அதே நேரத்தில், இத்தகைய ஆடம்பர வெளிப்பாடுகள் அதிகமாகி முகம் சுளிக்கும் அளவுக்கு அமைந்துவிடக் கூடாது என்று எச்சரிக்க வேண்டிய பொறுப்பும் உரிமையும் எனக்கு இருப்பதாகக் கருதுவதால் இந்த அன்பு வேண்டுகோளை விடுக்கிறேன்.

சாலையின் இருபுறத்திலும், சில நேரங்களில் சாலையின் நடுவிலும் பேனர்கள் அமைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்பது என் கட்டளையல்ல உரிமை கலந்த அன்புக் கோரிக்கை.

என்ன நிகழ்ச்சி நடைபெறுகிறது எங்கே நடைபெறுகிறது என்பதை கழகத்தினருக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஓரிரு பேனர்கள் மட்டும் அமைப்பதில் தவறில்லை. அந்தப் பேனர்களும் கூட பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி அமைக்க வேண்டும். வழிநெடுக பேனர்கள் அமைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

நிகழ்ச்சி பற்றிய விவரங்களைத் தெரிவிப்பதற்காக வைக்கப்படும் ஓரிரு பேனர்களில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இனமானப் பேராசிரியர் ஆகியோரின் படங்கள் மட்டும் இடம் பெற வேண்டும். கழகத்தின் லட்சியங்களை விளக்கும் அவர்களின் பொன்மொழிகள் இடம்பெற வேண்டும். நிகழ்ச்சி பற்றிய விவரங்களுடன், தேதியைக் குறிப்பிடும் போது நான் முன்பே விடுத்த வேண்டு கோள்படி, வழக்கமான ஆங்கிலத் தேதியுடன் தலைவர் கலைஞர் அவர்கள் சட்டப்பூர்வமாக்கிய திருவள்ளுவராண்டு தமிழ் மாதம்தேதி ஆகியவற்றையும் மறவாமல் குறிப்பிட வேண்டுகிறேன்.

கழகத்தினர் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என உணர்த்தும் வகையில், நிகழ்ச்சி அறிவிப்பு பேனர்கள் மட்டுமே போதுமானது. ஒவ்வொருவரும் தனித்தனியாகப் பேனர்கள் வைப்பதால் தான் அருமையான விழாக்கள் கூட ஆடம்பரமானதாக ஆகிவிடுகின்றன.

எனவே பேனர்களைத் தவிருங்கள். கழகத்தின் இரு வண்ணக் கொடியை அதிகம் பயன்படுத்துங்கள். காற்றில் அது அசைவதைப் பார்த்தபடியே வரும்போது, “வருக.. வருக..” என வரவேற்பது போலவே இருக்கும்.

உங்களில் ஒருவனாக மீண்டும் கோரிக்கை விடுக்கிறேன் ஆடம்பரப் பேனர்களைக் குறைத்து, அண்ணா கண்ட இருவண்ண லட்சியக் கொடிகளை உயர்த்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாம்பாக மாறி வரும் 16 வயது சிறுமி: கொடிய நோயின் பாதிப்பு!!