கோவையில் எழுச்சிப் பயணத்தை தொடங்கிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அறநிலையத்துறை பணத்தில் கல்லூரிகள் கட்டப்படுவதை கண்டித்து பேசியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து திமுக அரசின் குறைபாடுகளை விளக்கி, அதிமுகவிற்கு ஆதரவு சேர்க்க கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுச்சிப் பயணம் தொடங்கியுள்ளார்.
இந்த எழுச்சிப் பயணத்தை கோவையில் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி மக்களிடம் பேசியபோது, “கோயில் அறநிலையத்துறையில் நிறைய பணம் இருந்தது. அதை அவர்களால் (திமுக) பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏன் என்று நான் சொல்லக்கூடாது. அவர்களுக்கு கோயில் என்றாலே கண்ணை உறுத்துகிறது. அந்த பணத்தைக் கொண்டு போய் அரசு கல்லூரிகள் கட்டுகிறார்கள்.
கோயில் பணத்தை வைத்து கோயிலைத்தானே மேம்படுத்த வேண்டும். அதற்காக பக்தர்கள் பக்தியுடன் தரும் காணிக்கை அது. அதை வைத்துதான் கல்லூரிகள் கட்ட வேண்டுமா? ஒரு 10 கல்லூரிகளை கட்டுவதற்கு கூட அரசிடம் பணம் இல்லையா?
அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அனைத்து அரசு கலை கல்லூரிகள், கால்நடை கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள் என அனைத்தும் அரசு பணத்திலேயே கட்டப்பட்டன. அப்படியிருக்க ஒரு சாதாரண கலை அறிவியல் கல்லூரியை கூட அரசு பணத்தில் கட்டமுடியவில்லை என்றால் இந்த அரசாங்கம் தேவையா?” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K