நாட்டில் எந்த பிரச்சனை நடந்தாலும் முதல் நபராக அனைத்து கட்சி கூட்டம் நடத்தி ஆலோசிப்பவர் அனேகமாக திமுக தலைவராகத்தான் இருப்பார். இது பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஒரு வழக்கம். நீட் பிரச்சனை, கதிராமங்கலம் பிரச்சனை, காவிரி பிரச்சனை உள்பட பல பிரச்சனைகளுக்கு உடனடியாக அனைத்து கட்சி கூட்டம் என்ற பெயரில் ஒரு கூட்டணி கட்சி கூட்டத்தை திமுக தலைமை கூட்டுவதுண்டு. அந்த கூட்டத்தால் எந்தவொரு சிறு பயனும் இருக்காது என்று தெரிந்தும் பல தீர்மானங்கள் இயற்றப்படுவதும் உண்டு.
இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன்களாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்து அதுகுறித்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டு வரும் அக்டோபர் மாதம் அமலுக்கு வரவுள்ள நிலையில் திமுக, காஷ்மீர் பிரச்சனைக்காக இன்று ஒரு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டத்தில் காங்கிரஸ் தங்கபாலு, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகிய கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வழக்கம்போல் சில தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அந்த தீர்மாங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
* நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பெரும்பான்மை மசோதாக்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவை
* நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக்கட்சி குழுவினை காஷ்மீருக்கு அனுப்பி அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடி உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்
* காஷ்மீருக்கான புதிய சட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும்
* காஷ்மீர் பிரச்சினை: மோடியின் இரண்டாவது ஆட்சிக் கப்பல், தொடக்கத்திலேயே தரை தட்டிவிட்டது
* கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களையும் ஏனையோரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்
* இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்த விதக் குந்தகமும் இன்றி, இராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும்
மேற்கண்ட தீர்மானங்களை மத்திய அரசு கண்டு கொள்ளப்போவதில்லை என்று நன்றாக தெரிந்தும் திமுக இந்த தீர்மானங்களை இயற்றி இருப்பது அக்கட்சியின் அதீத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது