நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி திமுக சார்பில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு ஆகியவற்றை அமைத்து திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக பாஜக இடையே பிளவு ஏற்பட்டுள்ளதால், வருகின்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில் ஒரு புதிய கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் தேர்தலை சந்திக்க உள்ளன. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி அமைப்பாளர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிகவும் பாஜகவுடன் நட்பு பாராட்டி வருவதால் அந்த கட்சியும் பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவும் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவ்வாறு தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் திமுக சார்பில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினை தயாரிக்க குழு அமைக்கப்பட்டது. எம்பி கனிமொழி தலைமையில் டி.கே.எஸ் இளங்கோவன், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி ராஜா, கோவி செழியன், ராஜேஷ்குமார், எழிலரசன், அப்துல்லா, எழிலன் நாகநாதன், மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட திமுக குழு ஒன்றை அமைத்துள்ளது. குழு தலைவராக டி.ஆர் பாலு நியமிக்கப்பட்டுள்ளார். கே என் நேரு, பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.