Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக ஊராட்சி மன்றத் தலைவருக்குக் கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் - சீமான்

திமுக ஊராட்சி மன்றத் தலைவருக்குக் கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் - சீமான்
, திங்கள், 29 மே 2023 (20:15 IST)
மணற்கொள்ளையைத் தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக ஊராட்சி மன்றத் தலைவருக்குக் கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்  என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே நரசிங்கபுரத்தில் செம்மண் கடத்தலில் ஈடுபட்ட மணற்கொள்ளையர்களைத் தடுக்க முயன்ற துறையூர் வருவாய்ஆய்வாளர் பிரபாகரன் மீது கொலைவெறித் தாக்குதல்  நடத்தப்பட்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மலை, மணற்கொள்ளையர்களுக்கு ஆதரவாகச்செயல்பட்டு, அரசு அதிகாரிகள் தாக்கப்படுவதை வேடிக்கைப் பார்க்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்ஸிஸ் மணற்கொள்ளையைத் தடுத்ததற்காக கடந்த மாதம் அவரது அலுவலகத்திலேயே கொலை செய்யப்பட்டார். அக்கொடூரநிகழ்வின் வடு மறைவதற்குள், துறையூரில் செம்மண் கொள்ளையைத்தடுத்து நிறுத்தியதற்காக வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத்தலைவர் மகேசுவரன் மற்றும்தனபால், மணிகண்டன், கந்தசாமி உள்ளிட்ட நால்வர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது அரசு ஊழியர்களிடையேயும், பொதுமக்களிடத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்காப்புக்காக அரசுஊழியர்கள் துப்பாக்கி கேட்டு போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் நேர்மையான அரசு அதிகாரிகளின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத வகையில் சட்டம்ஒழுங்கு முற்றாகச் சீர்குலைந்துள்ளது வெட்கக்கேடானது. ஆளுங்கட்சி என்ற திமிரிலும், அதிகார மமதையிலும் திமுகவைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் முதல் அமைச்சர்கள் வரை அரசு அதிகாரிகளை மிரட்டி,அச்சுறுத்தி, தாக்குவது கொடுங்கோன்மையின் உச்சமாகும். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் ஈடில்லா இரண்டாண்டு காலச் சாதனையா? என்ற கேள்விக்கு திமுக அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும்.

ஆகவே, அரசு அலுவலர்கள் மீது தாக்குதல் நடத்தும் கொடுமைகள் இனியும் நடைபெறா வண்ணம், துறையூர் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ள திமுக ஊராட்சி மன்றத்தலைவர் மகேசுவரன் உள்ளிட்ட நால்வருக்கும் கடும்தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

மக்கள் பணியில் மிகுந்த நேர்மையுடனும், துணிவுடனும் செயற்பட்டமைக்காக ஆளுங்கட்சியினரின் கொடுந்தாக்குதலுக்கு உள்ளாகி துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் வருவாய் ஆய்வாளர் அன்புத்தம்பி பிரபாகரன் அவர்கள் விரைந்து நலம்பெற வேண்டும் என்ற எனது விருப்பத்தையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்’’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் முடிவு