திமுகவின் சொத்து மதிப்பு என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட தகவல்களுக்கு எதிராக அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை திமுகவை சேர்ந்த 12 நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்களது சொத்து பட்டியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் இந்த பட்டியலில் உள்ள தகவல்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறியுள்ள திமுக பிரமுகர்கள் அதற்கான ஆதாரங்களை அண்ணாமலை காட்ட வேண்டும் என கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது திமுக வழக்கறிஞர் எம்.பி வில்சன் திமுக சார்பில் பாஜக அலுவலகமான கமலாலயத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் ”திமுக மீதும், திமுக பிரமுகர்கள் மீதும் ஆதாரமற்ற, பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறீர்கள். சில சொத்து மதிப்புகளை அதிகப்படுத்தியும், இல்லாத சொத்துகளை இருப்பதாக சேர்த்தும் அதிகமான போலியான சொத்து மதிப்பை தயாரித்திருக்கிறீர்கள். திமுகவில் உள்ள தனிநபர்களின் சொத்துகளை திமுகவின் சொத்துகளாக கருத முடியாது. உங்களிடம் உள்ள ஆடுகள், ரஃபேல் வாட்ச்சை பாஜகவின் சொத்தாக கருத முடியுமா?” என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது
மேலும், போலியான இந்த அறிக்கை மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். சமூக வலைதளங்களில் இருந்து வீடியோவை நீக்க வேண்டும். நஷ்ட ஈடாக ரூ.500 கோடியை அரசு பொது நிவாரண நிதியில் செலுத்த வேண்டும். இந்த அறிவிப்பு கிடைத்த 48 மணி நேரத்திற்குள் இதை செய்யாவிட்டால் சிவில் மற்றும் கிரிமினல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.