எதிர்வரும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து திமுக – மக்கள் நீதி மய்யம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளை சுமூகமாக முடித்து தொகுதிகளை ஒதுக்கி வருகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக்காக நடிகர் கமல்ஹாசன் அண்ணா அறிவாலயம் சென்றிருந்தார். இந்நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி பதவி தருவதாக சொல்லி இரு கட்சிகள் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியிலும் போட்டியிடாமல் ஆதரவை மட்டும் திமுகவுக்கு வழங்க உள்ளது.
கூட்டணி முடிவான நிலையில் இதுகுறித்து பேசிய கமல்ஹாசன் “மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை. ஆனால் இந்த கூட்டணிக்கு எல்லா ஒத்துழைப்பும் அளிப்போம். இது பதவிக்கான விஷயம் அல்ல. நாட்டுக்கான விஷயம் என்பதால் எங்கு கைக்குலுக்க வேண்டுமோ அங்கே கைக்குலுக்கியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.