மத்திய அரசின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திமுக நடத்த இருக்கும் பேரணியில் கலந்து கொள்ள கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்கள், எதிர் கட்சிகள் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள், பேரணிகள் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடைபெறும் இடங்களில் வன்முறை வெடிப்பதால் நாட்டில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனால் கலவரம் ஏற்படலாம் என கருதப்படும் பதட்டம் நிறைந்த பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் சென்னையில் நடந்து முடிந்தது. இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொள்ளாவிட்டாலும் மு.க.ஸ்டாலினுக்கு போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
டிசம்பர் 23 அன்று திமுக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னையில் மாபெரும் பேரணி நடத்த இருக்கிறது. இதற்கு கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று கமல்ஹாசனை அவரது இல்லத்தில் சந்தித்த திமுக உறுப்பினர்கள் கே.எஸ்.பாரதி மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் திமுக பேரணிக்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
கமல்ஹாசன் கால்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்து வரும் நிலையில் அவர் பேரணியில் கலந்து கொள்வது சந்தேகமே என கூறப்படுகிறது. எனினும் பேரணிக்கு தனது ஆதரவை அவர் தெரிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.