Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழிசைக்கு வரலாறே தெரியவில்லை: திமுக கடும் தாக்கு

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2018 (21:51 IST)
சமீபத்தில் இந்தியா வந்த முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே, இலங்கையில் நடந்த இறுதிப்போரில் இந்தியா அனைத்து வகையிலும் உதவி செய்ததால்தான் புலிகளை தோற்கடிக்க முடிந்ததாக கூறினார். அந்த போரின் காலகட்டத்தில் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. அந்த ஆட்சிக்கு திமுக ஆதரவு தந்து கொண்டிருந்தது என்பதால் இனப்படுகொலைக்கு காங்கிரஸ் மற்றும் திமுகவே காரணம் என பாஜகவும் அதிமுகவும் குற்றஞ்சாட்டி வருகின்றன

இந்த நிலையில் இதுகுறித்து திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் போது இலங்கைக்கு காங்கிரஸ் கூட்டணி உதவியதாகவும் அதற்கு கழகம் துணை போனதாகவும் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. இலங்கையில் நடந்த இறுதிப் போரின்போது தலைவர் கருணாநிதி எப்படி வேதனைப்பட்டார் என்பதை அவருடன் இருந்தவர்களும், தலைவர் கருணாநிதியை நன்கு அறிந்தவர்களுக்கும் தெரியும். தமிழிசை அவர்களே! ஈழம் என்ற சொல்லோ, அதன் வரலாறோ 2009ஆம் ஆண்டில் இருந்து துவங்கியதில்லை. நீங்கள் பிறப்பதற்கு முன்பே கருணாநிதி ஈழமக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்.

தி.மு.கழகம் துவக்கப்பட்ட காலக்கட்டத்தில், அறிஞர் அண்ணா பொதுச்செயலாளராக தலைமை தாங்கி சிதம்பரத்தில் நடந்த பொதுக்குழுவில் ஈழத்தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண, நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானத்தை முன்மொழிந்தவர் கருணாநிதி. அதன்பின்னர், தூத்துக்குடியில் நடந்த பொதுக்குழுவில், ஈழத்தமிழர் பிரச்சனையை ஐநா மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தவரும் கருணாநிதி தான். இதனை எல்லாம் இதற்கு முன் நீங்கள் வாசித்திருக்க வாய்ப்புகள் கிடைத்திருக்காது. அதுதான் உங்களின் ஈழப்பாசம். தேவைப்பட்டால் தங்களின் தகப்பனார் இலக்கியச் செல்வர் குமரிஅனந்தனை தொடர்புகொண்டு அறிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

தமிழக வரலாற்றையும், கருணாநிதி, இலங்கை தமிழர்கள் மீது கொண்டிருந்த அக்கறையையும் அவர் நன்கு அறிவார். அதன் பின்னர் ஈழத்தமிழர்களுக்காக அவர் நடத்திய போராட்டங்கள், எழுதிய கடிதங்கள், அறிக்கைகள் எண்ணிலடங்காது. 1983-1984 காலக்கட்டத்தில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டிக்கும் வகையில் கருணாநிதியும், கழக பொதுச்செயலாளர் பேராசிரியரும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர் என்பதாவது தமிழிசை அறிவாரா? என்றால் அதற்கும் வாய்ப்பில்லை. எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின், ஒயர்லஸ் ரேடியோவை (வாக்கி டாக்கி) உளவுத்துறை உயர் அதிகாரி மோகன்தாசை விட்டு பிடுங்கி வைத்ததும், பிரபாகரனின் சகாக்களில் ஒருவரான கிட்டுவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததும் அதிமுக அரசு தானே.

ஈழத் தமிழருக்காக அந்தக் காலக்கட்டங்களில் எம்.ஜி.ஆர் அரசைக் கண்டித்து பல போராட்டங்களில் செய்து கைதானது தலைவரும் திமுகவினரும்தான். 1989ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களுக்கு கடிதம் எழுதியதின் விளைவாக, கருணாநிதியை, ராஜிவ்காந்தி கேட்டுக் கொண்டதின் பேரில் பாலசிங்கம் போன்றவர்களை அழைத்து துறைமுகம் விருந்தினர் மாளிகையில் ஆலோசனை நடத்தியதை அறிந்தவரா இந்த தமிழிசை சௌந்தரராஜன்? அல்லது 1991ஆம் ஆண்டில் இந்த ஆட்சி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.

போராளிகளை தமிழகத்தில் ஊடுருவ செய்துவிட்டது. இந்த ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா பேசியது தெரியுமா? பிரபாகரனை கொண்டு வந்து தூக்கில் போட வேண்டும் என்றவருக்கு ஈழத்தாய் பட்டம் கொடுத்த மண்தானே இது. இவற்றை எல்லாம் வரலாறு மறக்கலாம். என்போன்ற ஈழ ஆர்வலர்கள் அக்கறை கொண்டவர்கள் மறந்து விட மாட்டோம்.

2009 முள்ளிவாய்க்கால் இறுதிப்போருக்கு பின்னரும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள், எஞ்சியிருக்கும் தமிழர்கள் நலனுக்காக சென்னையில் ஆகஸ்ட் 12ஆம் தேதியில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களையும் - ஈழ ஆர்வலர்கள் - மனித உரிமை ஆர்வலர்கள் - தேசிய தலைவர்களை அழைத்து காலையில் கருத்தரங்கும் - மாலையில் டெசோ மாநாடும் நடத்தி தீர்மானங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி. அன்றைய காலக்கட்டத்தில் ஈழம் என்ற சொல்லைக் கூட பயன்படுத்த தடை உத்தரவு போடப்பட்டது. அந்த தடை உத்தரவை நீதிமன்றம் சென்று உடைத்ததின் விளைவாக தானே இன்றும் ஈழம் என்ற சொல்லை இவர்களால் பயன்படுத்த முடிகின்றது.

சென்னையில் 12-8-2012 அன்று நடைபெற்ற டெசோ மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு:-

ராஜபக்சே நடத்திய கொடூர இன அழிப்பை ஐ.நா. அவையின் மனித உரிமைக்குழுவின் சார்பில் சர்வதேச நம்பகமான, சுதந்திரமான விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டு, இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பும் போர்க்குற்றங்களும் கண்டறியப்பட்டு, போர் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்திய அரசே இதனை செய்ய வேண்டும் ஈழப்பகுதிகளில் சிங்கள மக்களை குடியமர்த்தும் முயற்சியை இலங்கை அரசு செய்து வருகிறது. இலங்கை அரசின் இத்தகைய கொடுஞ் செயல்களை உலக நாடுகளின் பிரதிநிதியாக விளங்கும் ஐ.நா. மன்றம் உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு முழு உரிமை வழங்குவதற்கு இந்திய அரசு ஐ.நா.மன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.

தமிழீழ பகுதிகளில் இருந்து உடனடியாக ராணுவத்தை சிங்கள அரசு விலக்கி கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் அவையும், உலக நாடுகளும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ராணுவத்தை திரும்பப் பெறுவதை நேரடியாக கண்காணிப்பதற்கு, ஐக்கிய நாடுகள் அவை ஒரு பன்னாட்டு குழுவை ஏற்படுத்த வேண்டும்.

இலங்கையில் இருந்து வெளியேறி, பல்வேறு நாடுகளில் அகதிகளாக அல்லலுறும் தமிழர்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் சொந்த நாட்டை விட்டு வெளியேறியதால் பிறநாடுகளில் கைதிகளாக சிறையில் வாடும் ஈழத்தமிழர்களை உடனடியாக, ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகளுக்கான ஆணையரிடம் ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஐ.நா. மன்றம் மேற்கொள்ள வேண்டும்.

உலககெங்கும் உள்ள இலங்கை தமிழர்களிடம், அவர்களுடைய எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அது தெற்காசிய மனித உரிமைகள் பிரச்சினையாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

இலங்கை தமிழர்களை பாதிக்கக்கூடிய அளவிற்கு இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பயிற்சி கொடுப்பதை இந்த மாநாடு ஏற்க இயலாது என்பதோடு, இனி அப்படிப்பட்ட பயிற்சிகள் அளிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இலங்கையில் கைது செய்யப்பட்டவர்கள் உடனே விடுதலை செய்ய வேண்டும். காணமல் போனவர்களை கண்டுபிடித்து உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை பாதுகாப்புக்காக தாய்த் தமிழகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டினை சட்டவிரோதமானது என்றும், இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இலங்கையில் இருந்து செல்பவர்கள் மீது கவனம் செலுத்தப்படும் என்றும் இலங்கை அரசின் சார்பில் மிரட்டலாக அறிவித்துள்ளனர். இலங்கை அரசின் இந்த ஜனநாயக எதிர்ப்பு தன்மையை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழிசை அவர்களே! உங்களுக்கு தேவைப்பட்டால் "கலைஞரும் ஈழத்தமிழரும்" என்ற வரலாற்று ஆவணத்தை அனுப்பி வைக்கின்றேன். மேற்காணும் தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கைதானார். மத்திய அரசில் இருந்த போதும் அங்கம் வகிக்காத போதும் ஈழத்தமிழர் நலனுக்காக திராவிட முன்னேற்ற கழகம் போராட தயங்கியதில்லை என்பதை சொல்லிக் கொள்ள கடமைப் பட்டிருக்கின்றேன். முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது கருணாநிதி குடும்பத்தினருக்குகூட சொல்லாமல் அண்ணா நினைவிடம் சென்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி போன்றவர்களும், மத்திய அரசும் போர் நிறுத்தப்பட்டது, இனி அத்தகைய நிலை தொடராது என்று உறுதி அளித்த பின்னர் மதிய வேளையில் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

வீணர்கள் விமர்சனம் செய்யலாம், அக்கறை கொண்டவர்கள் அதனை புரிந்துக் கொண்டால் போதுமானது. திமுகவும் - அதன் தலைவர்களும், கழகத்தின் உயிர் நாடியான கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான உடன்பிறப்புகள் செய்த தியாகத்தை விட வேறுயாராவது செய்திருக்க முடியுமா? முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நடந்த 1991 காலக்கட்டத்தில் தான் ஜெயலலிதா அம்மையார் "விடுதலைப்புலிகளின் இயக்கம் பயங்கரவாத இயக்கம், அது மனித நேயத்திற்கு எதிரானது, அதற்கு துணைபோகும் திமுகவும் அழிக்கப்பட வேண்டும்" என அறிக்கை அளித்தார்.

அத்தோடு, விடுதலைப் புலிகளின் தலைவர் கொடூரவாதி பிரபாகரனை கைது செய்து, தூக்கிலிட வேண்டும். என்று பலமுறை சட்டமன்றத்தில் பேசியுள்ளதோடு, தீர்மானமும் நிறைவேறியுள்ளார் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா. திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போதும் 2010- 2011 காலக்கட்டத்தில் திமுகவின் நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் இந்திய நாடாளுமன்றத்தின் போராட்டம் செய்தார்கள். இதனை தமிழிசை சௌந்தரராஜன் பிஜேபி வட்டாரங்களில் கேட்டு அறிந்துக் கொள்ள வேண்டும்.

அதேசமயத்தில் தேசிய தலைவர்களை அழைத்து டெல்லியில் டெசோ ஆலோசனைக் கூட்டம் டெல்லி காண்ஸ்டியுஷன் க்ளப்பில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டி.ஆர்.பாலு நடத்தி டெசோ தீர்மானங்களை இந்திய நாடாளுமன்றம் ஐநா மன்றத்திற்கு அனுப ்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியது. டெசோ மாநாட்டு தீர்மானங்களை காமன்வெல்த் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி நீதிவிசாரனை வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது திமுக. கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு அமைத்து, உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபைக்கே நேரில் சென்று, ஐ.நா.மன்றத்தில் கருணாநிதி கையெழுத்திட்ட மனுவினை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும், டி.ஆர்.பாலு அவர்களும் வழங்கினார்கள்.

இதேபோன்ற மற்றொரு மனுவினை ஜெனிவாவில் உள்ள மனித உரிமை ஆணையத்தின் துணை ஆணையர் நவநீதம் பிள்ளையிடமும் வழங்கினார். அவ்வமயம் பிரிட்டன் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் வகையில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். டெசோ தீர்மானங்களையும், திமுகவின் பொதுக்குழு தீர்மானங்களையும் ஐ.நா மன்றம் அதன் ஆண்டறிக்கையில் வெளியிட்டது. எந்த ஒரு இயக்கத்திற்கும் ஐநா இத்தகைய முக்கியத்துவம் கொடுத்ததாக தெரியவில்லை. அந்த அறிக்கைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

கரைபடிந்த ராஜபக்ஷேவின் கரங்களை அங்கு சென்று முகர்ந்தாரே மோடி? அதே ராஜபக்ஷேயையும் அவர் மகனையும் கடந்த வாரம் டெல்லிக்கு வந்தபோது அகமகிழ்ந்து வரவேற்றாரே? அதைப்பற்றி ஈழத்தமிழர் நலன் மீது அக்கறை கொண்ட தமிழிசை வாய் மலர்ந்ததுண்டா? வழிநெடுகிலும் வரலாறுகள் குவிந்துள்ளன. முள்ளி வாய்க்கால் தடயங்களைப் போலவே எங்களின் மனதில் ஆறாக கவலைகள் உண்டென்றால் அது ஈழத்தமிழர்கள் குறித்த கவலை தான். இனியாவது தமிழிசை வரலாறு அறிந்து வாய் திறக்க வேண்டும்.

வரலாறு தெரியாமல் புதிய வரலாற்றை கழகத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அளிக்க உள்ளது ஆளும் அடிமை அரசு. அதாவது எதிர்க்கட்சிக்கு எதிராக ஆளும் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது வேடிக்கையானது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments