மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்படாத நிலையில் மருத்துவமனையை காணவில்லை என திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.
சமீபத்தில் காரைக்குடியில் நடந்த பாஜக கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் 95% முடிக்கப்பட்டுவிட்டதாக பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான பூர்வாங்க பணிகள் 95% முடிந்துவிட்டிருப்பதாக அவர் சொன்னதாக பாஜகவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் முன்னதாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நட்டு சென்றார். அதன்பின்னர் இன்று வரை கட்டிட பணிகள் எதுவும் தொடங்காமல் இருப்பதால் விரைவில் கட்டிட பணிகளை தொடங்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஜே.பி.நட்டா பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து திமுகவினர் மதுரை ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் எய்ம்ஸ் மருத்துவமனையை காணவில்லை என்றும், கண்டுபிடித்து தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான இந்த சம்பவங்கள் தொடர் வைரலாகி வருகின்றன.