நீட் தேர்வுக்கு எதிராக பல அரசியல் கட்சிகள் போராடி வரும் நிலையில் மத்திய பாஜக அரசு நீட் தேர்வு நடத்துவதில் உறுதியாக உள்ளது.
ஏற்கனவே நீட் தேர்வு அச்சத்திலும் தோல்வி அடைந்ததாலும் மாணவர்கள் தற்கொலை செய்து வந்த நிலையில், சமீபத்தில் குரோம்பேட்டையைச் சேர்ந்த தம்பி ஜெகதீஸ்வரன் , நீட் தேர்வில் 2 முறை தோல்வியடைந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சோகம் மறைவதற்குள், அவருடைய தந்தை திரு.செல்வசேகர் அவர்களும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நீட் விவகாரத்தில் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி திமுக உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளது.
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில், உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றும் நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசையும், தமிழக ஆளுநரையும் கண்டித்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படவுள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.