மக்கள் பிரச்சினைகளுக்காக ஒன்றிணையாத திமுக, அதிமுக இன்று கறுப்பு பண விவகாரத்தில் கைகோர்த்திருக்கிறார்கள் என்றால், மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கணக்கில்லாமல் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதில் பிரதமருக்கு மக்கள் முழு ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள். வரிசையில் மக்கள் நின்று சிரமத்திற்கு உள்ளாகினர் என்பதற்காக நாம் மக்களிடம் மன்னிப்பு கோருவோம்.
ஆனால் வருங்காலத்தில் வரிகள் எல்லாம் தங்களுக்கு சாதகமாகும் என்பதை உணர்ந்தே, மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். நாட்டு மக்கள் அனைவரும் இப்படி ஒட்டுமொத்தமாக பிரதமருக்கு ஆதரவு தெரிவிப்பதால், எதிர்க்கட்சிகள் அதை பொறுக்க முடியவில்லை.
நாடு சந்தித்த மிகப் பெரிய பிரச்சினையாகட்டும், காவிரி, முல்லை பெரியாறு பிரச்சனை ஆகட்டும், மக்கள் பிரச்சினைகளுக்காக ஒன்றிணையாத திமுக, அதிமுக இன்று கருப்பு பண விவகாரத்தில் கைகோர்த்திருக்கிறார்கள் என்றால், மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
போராடும் கட்சிகளின் பின்புலத்தை பார்த்தீர்கள் என்றால், மக்கள் பணத்தை வாரி சுருட்டியவர்களும், வரி ஏய்ப்பவர்களும் தான் முன் நிற்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.