மக்களவை தேர்தல் தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த தேமுதிக, தற்போது பாஜகவுடன் கூட்டணி குறித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. தேமுதிகவில் தலைவர் விஜயகாந்த் மறைந்த நிலையில் அவரது பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் கூட்டணி குறித்து காய்களை நகர்த்தி வருகிறார்.
இந்த முறை மாநிலங்களவை சீட் கண்டிப்பாக வேண்டும் என்பதில் பிரேமலதா விஜயகாந்த் உறுதியாக உள்ளார். அவரது இந்த டிமாண்டுக்கு ஒத்துக் கொள்ளும் கட்சியோடு கூட்டணி என்ற கறார் நிலையில் கடந்த வாரம் முதலாக அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழு தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு, மாநிலங்களை எம்பி சீட் விவகாரத்தில் இரு தரப்பிலும் சுமூகநிலை எட்டப்படவில்லை என பேசிக் கொள்ளப்படுகிறது. இதற்கிடையே தமிழக பாஜக தொடர்ந்து தேமுதிகவுடன் கூட்டணிக்கு சிக்னல் காட்டி வருவதாக கூறப்படும் நிலையில், இன்று பாஜகவுடனான பேச்சுவார்த்தையில் தேமுதிக ஈடுபட வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.