திமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட, திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரி, தேமுதிகவில் இணைவதற்கு தயாராக இருக்கிறார் என்று தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ பார்த்தசாரதி தெரிவித்துள்ள கருத்தால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சந்தித்த படுதோல்விக்கு அடுத்து, அந்த கட்சியிலிருக்கும் ஏராளமான மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். இது தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.
இந்நிலையில், இதுபற்றி தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் தலைமை நிலையச் செயலர் பார்த்தசாரதி செய்தியாளர்களிடம் கூறியபோது “தேமுதிகவில் இருந்து யார் வேண்டுமானாலும் விலகலாம். ஆனால் உண்மையான தொண்டர்கள் கட்சியில் தொடர்ந்து நீடிப்பார்கள். 5 முறை ஆட்சிக்கு வந்ததாக தம்பட்டம் அடித்துக் கொள்கிற திமுக, கீழ்த்தரமான வேலையில் இறங்கி, தேமுதிக கட்சி நிர்வாகிகளை அவர்கள் பக்கம் இழுத்து வருகிறது.
மேலும், பிரேமலாதா கூறினால், விஜயகாந்தே திமுகவில் இணைவார் என்றும் கூறிவருகிறார்கள். உண்மையில், திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரிதான் தேமுதிகவில் இணைவதற்கு தயாராக இருக்கிறார். அவர் விஜயகாந்தின் உத்தரவுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்” என்று கொளுத்தி போட்டார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில், தேமுதிகவை திமுகவின் கூட்டணியில் இழுக்க முயற்சி நடந்தபோது, அதற்கு அழகிரி பலத்த எதிர்ப்பு காட்டினார். இதனால், அவர் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் தேமுதிகவில் சேருவதற்கு தயாராக உள்ளார் என்று பார்த்தசாரதி கூறியிருப்பது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.