தேமுதிக வில் கூட்டணி குழப்பங்கள் நடந்தேறி வரும் நிலையில் கட்சி தலைமைக்கும் அதன் மாவட்ட செயலாளர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள மாநிலக் கட்சிகள், சமுதாயக் கட்சிகள் மற்றும் தேசியக் கட்சிகள் ஆகியவை எல்லாம் திமுக மற்றும் அதிமுக ஆகிய அணிகளில் இறங்கி தங்களுக்கான சீட்களைப் பெற்றுள்ளன. ஆனால் இன்னும் எந்தக் கட்சிகள் எங்கு போட்டியிடும் என்ற விவரம் இரண்டுக் கட்சிகளாலும் வெளியிடப்படவில்லை. ஆனால் தேமுதிக மட்டும் இன்னமும் எந்த முடிவையும் எடுக்காமல் அமைதியாக இருந்து வருகிறது.
நேற்று அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் மாநாடு நடைபெற்றதால் அதற்குள்ளாக தேமுதிக வைக் கூட்டணிக்குள் இழுக்க பாஜகவும் அதிமுகவும் போராடிப் பார்த்தனர். இடையில் தேமுதிக 4 சீட்டுகளுக்கு ஒத்துக்கொண்டதாக செய்திகளும் வந்தன. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் அறிவிககப்படவில்லை. மாலையில் நடந்த கூட்டணிக் கட்சிகளின் மாநாட்டிலும் தேமுதிக கலந்துகொள்ளவில்லை.
இதையடுத்து மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் நேற்று தேமுதிக சார்பில் எங்களிடம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறி பரபரப்புகளைக் கிளப்பினார். அதனால் ஒரே நாளில் இரண்டு கட்சிகளோடும் தேமுதிக கூட்டணி பேரம் நடத்தியது முறையல்ல என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அதிமுக வும் இப்போது தேமுதிகவைக் கூட்டணிக்குள் கொண்டுவரலாமா என்ற யோசனையில் இருப்பதாகத் தெரிகிறது.
ஆனால் துரைமுருகனின் குற்றச்சாட்டை தேமுதிக தரப்பில் மறுத்துள்ளன. துரை முருகன் தான் திமுக தலைமை மீது அதிருப்தி கொண்டு தன்னிடம் புலம்பினார் என எல் கே சுதீஷ் தெரிவித்துள்ளார். இதனால் திமுக மற்றும் தேமுதிக இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது. இப்போது சுதீஷின் குற்றச்சாட்டுக்கு எதிராக துரைமுருகன் மீண்டும் ஒரு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.
அதில் தன்னுடன் பேச வந்த தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கட்சி மேலிடம் அதிமுக வோடுக் கூட்டணி வைக்க விரும்புவதாகவும் ஆனால் மாவட்ட செயலாளர்கள் எல்லோரும் திமுக வோடுதான் கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறி வந்ததாகவும் தெரிவித்தனர். நீங்கள் வந்த விஷயம் உங்கள் தலைவருக்குத் தெரியுமா என்று கேட்டபோது அவர்தான் எங்களை அனுப்பி வைத்தார் எனக் கூறினர்’ எனக் கூறியுள்ளார்.
இதனால் அதிமுகவோடு தேமுதிக கூட்டணி வைத்தால் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் தேமுதிக வில் இருந்து வெளியேறுவார்கள் என கூறப்படுகிறது.