தீபாவளி உள்பட இந்து பண்டிகைகளுக்கு திமுக தரப்பிலிருந்து எந்த வாழ்த்தும் வராத நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"நம்பிக்கை உள்ளவர்களுக்கும், கொண்டாடுபவருக்கும் தீப ஒளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் சென்னையில் நடந்த நிகழ்ச்சியின் போது கூறியுள்ளார்.
பொதுவாக திமுக தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுகவில் உள்ள யாரும் தீபாவளி வாழ்த்து சொல்வதில்லை. இது குறித்து பலமுறை எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் சுட்டிக் காட்டிய நிலையில், மற்ற மத பண்டிகைகளுக்கு மட்டுமே திமுக தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் தற்போது, விஜய் அரசியலுக்குள் வந்ததால் அடுத்த தலைமுறை அரசியல் உதயநிதி மற்றும் விஜய் என்று மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அனைத்து தரப்பின் நம்பிக்கையை பெற உதயநிதி தீபாவளி வாழ்த்து கூறியுள்ளதாக அரசியல் விமர்சனங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
மேலும், அரசியலுக்காக இல்லாமல் உண்மையிலேயே மனமாற்றம் ஏற்பட்டிருந்தால் வரவேற்கத்தக்கது என்றும், ஆன்மீகத்தில் ஈடுபாடு உடைய பெரியவர்கள் கூறியுள்ளனர். துணை முதல்வரிடம் ஏற்பட்டுள்ள இந்த மன மாற்றம் முதல்வரிடம் எதிரொலிக்குமா? முதல்வரும் இந்த ஆண்டு தீபாவளி வாழ்த்து தெரிவிப்பாரா என்பதனை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.