இந்த மாத இறுதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு வெடிக்க தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் நேரக்கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் மக்கள் பலரும் புத்தாடைகள், பட்டாசுகள் என வாங்க தொடங்கியுள்ளனர். பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாட்டை குறைக்க ஆண்டுதோறும் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாட்டை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மக்கள் திறந்த வெளியில் ஒன்றாக கூடி பட்டாசுகளை வெடிக்க அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள், சரவெடிகளை தவிர்க்க வேண்டும் என்றும், மருத்துவமனை, வழிபாட்டு தலங்கள் அருகே மற்றும் குடிசைகள் அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K