திருவள்ளுவர் சிலை கேட்பாரற்று கிடப்பது குறித்து, அவமதிக்கப்பட்டது சிலையல்ல, ஒரு சமூகத்தின் மானம் என்று மனநல மருத்துவர் ருத்ரன் கூறியுள்ளார்.
உத்திரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை கரையில் 12 அடி திருவள்ளுவர் சிலையை நிறுவ பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் முயற்சி செய்தார். கடந்த 29ஆம் தேதி ஆளுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்ட விழாவில் சிலையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், சாதுக்களின் கடும் எதிர்ப்பால், பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை தற்காலிகமாக நிறுவப்பட்டது. ஆனால், தற்போது அங்குள்ள பூங்கா ஒன்றில் கறுப்பு நிற கவரால் சுற்றி, கட்டப்பட்ட நிலையில் கேட்பாரற்று கிடக்கிறது.
திருவள்ளுவர் சிலைக்கு நேர்ந்த அவலம் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மனநல மருத்துவர் ருத்ரன், அவமதிக்கப்பட்டது சிலையல்ல, ஒரு சமூகத்தின் மானம் என்று கூறியுள்ளார். இது குறித்த அவரது முகநூல் பதிவு கீழே:
“அது அழகான சிலை இல்லைதான், சிற்பம் என சிலாகிக்கும் அளவு நுட்பமானதும் இல்லைதான்... ஆனால் அதை அநாகரிகமாய் ஒதுக்கி அவமானப்படுத்தும் அயோக்கியத்தனம் இந்த கேவலமான அரசின் திமிர் வளர்க்கும் தைரியத்தால் தானே.
ஆரிய மாயை என்பது என்ன? முன்னம் மறைந்த பழங்கதையா, இன்னும் தகிக்கும் கொடுந்தனலா? அவமதிக்கப்பட்டது சிலையல்ல, ஒரு சமூகத்தின் மானம்.
பெரும் விளம்பரத்துடன் தமிழ் காதல் நாடகத்துடன் (இது பாமக பிதற்றும் காதல் நாடகத்தை விடவும் கேவலம்) ஹரித்வார் கொண்டு சென்று பாலிதீன் மூட்டையாய் கிடத்திச் சென்றவன்... பாஜக ஆள் என்பதை சொல்லவே அவசியமில்லை. விளம்பரம் பொய்யால் மட்டுமே சாத்தியம் என்பது மட்டுமல்ல விளம்பரமே போதும் எனும் அரசியல் பாரம்பரியம் அது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.