Publish Date: Sun, 07 May 2017 (21:03 IST)
Updated Date: Sun, 07 May 2017 (21:05 IST)
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக ரூ.50 லட்சம் தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் சிக்கி தற்போது டிடிவி தினகரன் டெல்லி திகார் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு வருகிறார்.
அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் மேல் ஆதாரங்கள் கிடைத்து வருவதால் வழக்கு வலுவாகி வரும் நிலையில் இந்த வழக்கின் மிகப்பெரிய திருப்பமாக வழக்கறிஞர் கோபிநாத் அப்ரூவராக மாறியிருப்பது டிடிவி தினகரனுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எனவே தினகரனுக்கு நிரந்த களி, திகார் சிறையில் உறுதி என்றே டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக சென்னை வழக்கறிஞர் கோபிநாத் டெல்லி மாஜிஸ்திரேட்டிடம் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். ஹவாலா ஏஜென்ட் சுகேஷ் தினகரன் தரப்பில் இருந்து பணம் பெற்றதை தான் நேரில் பார்த்ததாகவும், பணத்தை பெற்றுக்கொண்ட சுகேஷ் சென்னையில் உள்ள நபரிடம் தொலைபேசியில் பேசியதாகவும் கோபிநாத் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் தினகரனின் நீதிமன்ற காவல் வருகின்ற 15ஆம் தேதி முடிவடையும் நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைக்காது என்றே கூறப்படுகிறது. ஆதாரங்கள் அதிகம் இருப்பதாகவும், ஆதாரங்களை அழிக்கும் சக்தி படைத்தவர் என்பதால் தினகரனுக்கு ஜாமீன் கொடுக்க அரசு தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது