தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்கும் பணியில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கியவுடன் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. நாங்கள்தான் உண்மையான அதிமுக என என இரு அணிகளும் கூறி வந்தனர். அதேபோல், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என இரு அணிகளும் கூறினர்.
இந்த விவகாரம் தேர்தல் கமிஷனுக்கு சென்றதும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதிமுக என்ற கட்சி பெயரையும் யாரும் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவு போட்டது. இது தினகரன் தரப்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. எனவே, அவர் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால், ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாக எழுந்த புகாரையடுத்து, அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதனால் கடும் அதிருப்தியில் இருந்த தினகரன், தற்போது இரட்டை இலை சின்னத்தை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் தினகரன் தரப்பிலிருந்து ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, அனைத்து நிர்வாகிகளிடமும் உறுதி மொழிப்பத்திரத்தில் கையெழுத்து பெற்று வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
எனவே, தமிழகமெங்கும் உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள், தங்கள் கையில் ரூ. 20,50 மற்றும் 100 மதிப்பிலான ஸ்டாம்ப் பேப்பர்களை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு நிர்வாகிகளிடத்தில் கையெழுத்து வாங்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் மாவட்ட செயலாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் கூட்டம் அலை மோதுகிறதாம். அப்படி அவர்களிடம் கையெழுத்து பெற்று, கட்சியில் உள்ள சட்ட நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, பின் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கப்படும். அதன் மூலம் நிர்வாகிகள் அனைவரும் தங்கள் பக்கம் இருக்கிறார்கள் என நிரூபித்து, முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க தினகரன் தரப்பு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.