சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ள அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று, கர்நாடக சிறையிலுள்ள சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார்.
ஓ.பி.எஸ் அணி தங்களோடு இணைய வேண்டும் என்பதற்காக, அதிமுக கட்சி விவகாரங்களில் இருந்து சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் அறிவித்த சூழலில், இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் டில்லி புழல் சிறையில் அடைக்கப்பட்டார் தினகரன்.
அதன் பின் ஜாமீனில் வெளியே வந்த அவர், இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதற்காகத்தான் நான் கட்சி பணிகளில் இருந்து விலகியிருந்தேன். ஆனால் இப்போதுவரை அது நடக்கவில்லை. எனவே, நான் கட்சி பணியில் மீண்டும் ஈடுபடுவேன் என கூறினார். அதைத் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் 32 பேர் அவரை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
அதையடுத்து சசிகலாவை சிறையில் சந்தித்து பேசினார் தினகரன். அதன் பின், 2 மாதங்கள் பொறுத்திருக்குமாறு சசிகலா என்னிடம் கூறினார் என கூறினார். தற்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் அவரை மீண்டும் சந்தித்து வருகின்றனர். மேலும், அவரின் கட்சி நடவடிக்கைகளுக்கு எந்த தடையும் இருக்கக்கூடாது என எடப்பாடி பழனிச்சாமியிடம் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது.
மேலும், அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து சசிகலா புகைப்படம் அகற்றப்பட்டது மூலம், எடப்பாடி அரசு இனி சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படாது என தெரியவந்துள்ளது. அதோடு, சசிகலா தரப்பு, கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்களிடம் பண பேரத்தில் ஈடுபட்டதாக சமீபத்தில் செய்தி வெளியானது. வீடியோவும் வெளியானது.
இந்நிலையில், இன்று பெங்களூர் அக்ரஹார சிறைக்கு சென்று தினகரன், அங்கு சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து அவர்கள் இருவரும் விவாதித்திருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனராம். இது தொடர்பாகவும், தினகரன் சசிகலாவோடு விவாத்திருப்பார் எனக் கூறப்படுகிறது.
எனவே, இந்த சந்திப்பிற்கு பின்னர் அதிமுக மட்டத்தில் மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.