தமிழக கலெக்டர்களை இட மாற்றம் செய்யும் விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், டி.டி.வி. தினகரனும் முட்டி மோதிக்கொள்வதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பொதுவாக ஒரு கட்சி ஆட்சி செய்யும் போது, அந்த கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு ஆதரவாக செயல்படாத கலெக்டர்கள் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்படுவது காலம் காலமாக நடந்து வருகிறது ஒன்றுதான்.
தற்போது தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி வகித்தாலும், டிடிவி. தினகரனே பின்னால் இருந்து அவரை இயக்கி வருகிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சில அமைச்சர்களின் புகார்களை அடுத்து, சில கலெக்டர்களை இட மாற்றம் செய்வது குறித்து தினகரன், எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசியுள்ளார். ஆனால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு பின் அதை செய்யலாம் என முதல்வர் அமைதி காத்ததாக தெரிகிறது. ஆனால், உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என தினகரன் தரப்பு நெருக்கடி கொடுத்து வருவதாகவும், இதனால் என்ன செய்வது என முதல்வர் தரப்பு யோசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.