Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காமராஜருக்கு ஏசி வசதி செய்துக் கொடுத்தாரா கருணாநிதி? - வைரலாகும் கருணாநிதியின் பழைய பதிவு!

Advertiesment
Kamarajar Karunanithi

Prasanth K

, வியாழன், 17 ஜூலை 2025 (10:38 IST)

காமராஜருக்கு அப்போதைய முதல்வராக இருந்து கருணாநிதி ஏசி வசதி செய்து கொடுத்ததாக திருச்சி சிவா பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில்,  தற்போது கலைஞர் கருணாநிதியின் பழைய பேஸ்புக் போஸ்ட் வைரலாகி வருகிறது.

 

சமீபத்தில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் உரையாற்றிய திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா, காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார் என்றும், அவருக்காக அவர் பயணிக்கும் அரசு விருந்தினர் மாளிகைகளில் ஏசியை ஏற்பாடு செய்து தந்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி என்றும் பேசியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

எளிமையின் உருவமாக வாழ்ந்த காமராஜர் ஏசியில் வாழ்ந்தார் என திருச்சி சிவா பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது என பல கட்சியினரும் அறிக்கைகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது தரப்பு அறிக்கையை வெளியிட்ட திருச்சி சிவா, தான் காமராஜர் மீது பெரும் அன்பும், மரியாதையும் வைத்துள்ளதாகவும், அவரை எங்குமே தாழ்த்தி பேச தான் நினைத்ததில்லை என்றும் கூறியுள்ளார்.

 

இந்நிலையில் இந்த ஏசி விவகாரம் குறித்து காலம் சென்ற கலைஞர் கருணாநிதியே எழுதிய பேஸ்புக் பதிவு தற்போது வைரலாகத் தொடங்கியுள்ளது. 2013ம் ஆண்டில் காமராஜர் பிறந்தநாளில் அவரை நினைவுக் கூர்ந்து கருணாநிதி மிக நீண்ட பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் “திரு. ராஜாராம் நாயுடு அவர்கள் ஒருமுறை மேலவையில் என்னிடத்திலே ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அதில் பெருந்தலைவர் காமராஜர், ``நான் ஊட்டிக்குச் செல்கிறேன், ஊட்டிக்குச் சென்றால் அங்கே அரண்மூர் அரண்மனையில் ஓரிரு வார காலம் தங்க நேரிடும். அதற்கான அனுமதியை எனக்கு வழங்குமாறு அதிகாரிகளுக்குச் சொல்ல வேண்டுகிறேன்'' என்று எழுதியிருந்தார். அதிலே கடைசியாக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலே அப்படி இடம் ஒதுக்கப்படுவது இயற்கை, அவ்வாறு ஒதுக்கவும் என்று எழுதப்பட்டிருந்தது. நான் உடனே ராஜாராம் நாயுடுவிடம், ``காமராஜருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலே இடம் ஒதுக்க முடியாது, தலைவர் என்ற முறையிலேதான் அவருக்கு இடம் தர முடியும், அவ்வாறே அவர் அங்கே தேவைப்படுகின்ற நாள் வரை தங்கலாம்'' என்று கூறினேன். அந்த அளவிற்கு அவரிடம் பற்றும் பாசமும் மரியாதையும்  கொண்டிருந்தவர்கள் நாங்கள். 

 

webdunia

தி.மு.கழக அரசு பதவிக்கு வந்த பிறகு கடுமையான சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய அந்தரங்கச் செயலாளர்கள் ``பெருந்தலைவர் அவர்கள் ஏ.சி. இல்லாமல் உறங்க முடியாது. அப்படிப்பட்ட உடல்நிலை இப்போது அவருக்குள்ளது. எனவே அரசு விடுதிகளில் ஏ.சி. ஏற்பாடு செய்து கொடுங்கள்'' என்று சொன்னார்கள். உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு ``அவர்கள் செல்கின்ற எல்லா விருந்தினர் மாளிகைகளிலும் ஏ.சி. வசதி செய்து கொடுங்கள். அவர் அதிகாரத்தில் இல்லையே என்று பார்க்காதீர்கள், நாமெல்லாம் அதிகாரத்திலே வருவதற்கு அவர் வழி விட்டவர், வழி காட்டியவர், எனவே நீங்கள் யாரும் இதில் சுணங்காதீர்கள்'' என்று உத்தரவு பிறப்பித்தேன். 

ஆம்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்திற்கு நேரமாகி விட்டது என்று அந்த ஊர் காங்கிரஸ் கட்சித் தோழர்கள் பெருந்தலைவரைப் பார்த்து அழைத்த நேரத்தில், உடனே காமராஜர் கோபத்தோடு, "சும்மா இரு அய்யா, கருணாநிதியை திட்டத்தானே கூப்பிடுகிறே, அவர் தான் ஊருக்கு ஊர் ஏ.சி. வச்சிக் கொடுத்திருக்கிறார், ஏ.சி.யை அனுபவித்துவிட்டுப் போய் அவரைத் திட்டச் சொல்றே, சரி, வாய்யா வாய்யா'' என்று சொன்னாராம் (கைதட்டல்) இப்படி ஒரு மானசீகமான பாசம் அவருக்கு என்மீது; எனக்கு அவர் மீது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த பழைய பதிவை தற்போது வேகமாக ஷேர் செய்து வரும் திமுகவினர், திருச்சி சிவா பேசியது உண்மைதான் என அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆகஸ்ட் மாதம் முதல் இலவச மின்சாரம்.. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு..!