வெங்கடாசலம் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என டிஜிபி சைலேந்திர பாபு அறிவிப்பு.
மறைந்த வெங்கடாசலம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டார். இவர் தனது பதவியை பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வெங்கடாசலம் தனது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கொடுக்கப்பட்ட மன அழுத்தம் காரணமாக வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டாரா? எனும் கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், வெங்கடாசலம் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிலையில் வெங்கடாசலம் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூரவ அறிவிப்பை டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ளார்.