தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வேகமாகப் பரவிவரும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் இதுவரை 17 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலம் தொடங்கும்போதும் வைரஸ் காய்ச்சல், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் எனப் பல்வேறு நோய்கள் பரவ ஆரம்பிக்கும். இந்தாண்டு இன்னும் பருவமழை ஆரம்பிக்காத நிலையில் கடந்த வாரங்களில் பெய்த லேசான மழைக்கே ஆங்காங்கே உள்ள சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் போன்றவற்றில் கொசுக்கள் உருவாகி பல்வேறு காய்ச்சல்களைப் பரப்பி வருகின்றன.
பருவமழை தொடங்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அதையும் மீறி இந்தாண்டு டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் கொசு ஒழிப்பு மற்றும் நோய் தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதனையடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். இருந்தபோதும் இந்தாண்டு இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 5 பேரும் பன்றிக் காய்ச்சலுக்கு 12 பேரும் பலியாகி உள்ளனர்.
சென்னையில் எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாதவரத்தைச் சேர்ந்த 7 வயது இரட்டைக் குழந்தைகளான தக்ஷன் மற்றும் தீக்ஷா இருவரும் சிகிச்சை பலனின்றி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தனர். மேலும் புளியந்தோப்பை சேர்ந்த ரிஸ்வான்(13), அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மோகனா(36) உள்ளிட்ட 5 பேர் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.
அதைபோல பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை தமிழகம் மற்றும் புதுவையில் 12 பேர் பலியாகி உள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 500 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்ற ஆண்டு இந்தியாவிலே டெங்கு காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை தமிழக்த்தில்தான் அதிகமாக இருந்தது. இந்த ஆண்டும் அதே போல் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க அரசு மற்றும் மருத்துவத்துறை நிர்வாகங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் காய்ச்சல் வந்துள்ள மக்களை தன்னிச்சையாக மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தி உள்ள்னர். டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கு தேவையான மருத்துவப் பொருட்கள் கைவசம் உள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.