பல கோடிகளை கடனாக வாங்கி தருவதாக கூறி ரூ.10 கோடி மோசடி செய்த குற்றத்திற்காக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
லத்திகா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டாக்டர் சீனிவாசன். அந்த படத்தை சொந்த காசை கொடுத்து, ஒரு திரையரங்கில் 100 நாட்கள் சீனிவாசன் ஓட வைத்தார் எனக் கூறப்படுவதுண்டு. அதன் பின் அவர் பல்வேறு தமிழ் சினிமாக்களில் காமெடியனாக நடித்துள்ளார்.
இந்நிலையில், 2013ம் ஆண்டு, கடன் வாங்கித்தருவதாக பலரிடம் வாக்குறுதி அளித்து, பல கோடிகள் கமிஷனாக பெற்று அவர் மோசடி செய்தார் என்ற புகார் எழுந்தது. ரூ.20 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி தன்னிடம் ரூ.50 லட்சம் கமிஷன் பெற்றுக் கொண்டு தன்னை சீனிவாசன் ஏமாற்றினார் என ஒரு ஆந்திர தொழிலதிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் அவர் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் மீது மேலும் பல புகார்கள் வரவே, சென்னை போலீசார் அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். அதன் பின் ஜாமீனில் வெளிவந்தார்.
அதேபோல், புளூ கோஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வரும் திலீப் பத்வானி என்பவருக்கு ரூ.1000 கோடியை கடனாக பெற்றுத் தருவதாக கூறி, அவரிடம் ரூ.5 கோடி கமிஷனாக பெற்றுள்ளார் சீனிவாசன். ஆனால், கூறியது போல் அவருக்கும் கடன் பெற்றுத்தரவில்லை. இது தொடர்பாக டெல்லி போலீசாரிடம் திலீப் புகார் அளித்தார். அதன் பேரில் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் 3 மாதம் அடைக்கப்பட்டார். அதன்பின் ஜாமீன் பெற்று அவர் வெளியே வந்து, தற்போது சில திரைப்படங்களிலும் அவர் நடித்து வந்தார்.
அவரை விசாரணைக்கு வரும் படி பலமுறை டெல்லி போலீசார் அழைப்பு விடுத்தனர். ஆனால், சீனிவாசன் செல்லவில்லை எனத் தெரிகிறது. இதனையடுத்து அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில், டெல்லி போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் ஆஜர் படுத்தியுள்ளனர். மீண்டும் அவர் திகார் சிறையில் அடைக்கப்படுவார் எனத் தெரிகிறது.