ஆர்.கே.நகரில் அதிமுக தோல்வி அடைந்ததையடுத்து, டெல்லியின் பார்வை வேறு பக்கம் திரும்பியிருக்கிறது எனக் கூறப்படுகிறது.
சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளர் தினகரன் தோற்கடித்துள்ளார். இந்த விவகாரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி-ஓபிஎஸ் தரப்புக்குதான் அதிர்ச்சியே தவிர டெல்லிக்கு அல்ல என தெரிய வந்ததுள்ளது.
அதாவது, ஆர்.கே.நகரில் தினகரனே வெற்றி பெறுவார் என்ற தகவல் உளவுத்துறை மூலம் மோடிக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. தினகரனை கழற்றி விட்டு, எடப்பாடி-ஓபிஎஸ் மூலம் அதிமுகவோடு கூட்டணி வைத்து தமிழகத்தில் பாஜக கால் பதிக்க நினைத்தது. ஆனால், ஆர்.கே.நகர் தொகுதியின் தேர்தல் முடிவு, இனிமேல் எடப்பாடி-ஓபிஎஸ்-ஐ நம்பி பலனில்லை என்ற முடிவிற்கு டெல்லி மேலிடம் வந்துள்ளதாக தெரிகிறது.
எதற்கும் இருக்கட்டும் என்றுதான், சமீபத்தில் சென்னை வந்த மோடி, கருணாநிதியை நேரில் சந்தித்தார். மேலும், 2ஜி வழக்கில் உங்களுக்கு சாதகமான முடிவே வரும் என டெல்லியிலிருந்து சிலர் மு.க.ஸ்டாலினிடம் தொடர்பு கொண்டு பேசியதாக ஏற்கனவே செய்தி வெளியானது. எனவே, அதிமுக சரி வராத போது, திமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க முயற்சி செய்யும் என பேசப்பட்டது.
தற்போது ஆர்.கே.நகர் மூலம் இரட்டை இலையை மக்கள் புறக்கணித்துள்ளதை டெல்லி மேலிடம் அதிர்ச்சியுடன் கவனிக்க தொடங்கியுள்ளது. அதிமுக ஆட்சியை அகற்றிவிட்டு ஆளுநர் ஆட்சியை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், ஆர்.கே.நகர் தேர்தலில் முடிவிற்கு பின் அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், ஆட்சி அகற்றப்பட்டால் அது திமுகவிற்கு சாதகமாகவே முடியும். எனவே, தினகரனையும் - எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பையும் ஒன்று சேர்த்துவைக்கும் முயற்சியில் டெல்லி இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி ஏற்கனவே தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்.கே.நகர் தேர்தலில் முடிவு டெல்லியின் அரசியல் விளையாட்டுகளின் போக்கை வேறு பக்கத்திற்கு திருப்பியுள்ளது. இனிமேல், பாஜக மேலிடம் தன்னுடைய காய்களை வேறு மாதிரி நகர்த்தும்.
தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும். மாற்றத்திற்காகவே காத்திருக்கிறார்கள் மக்கள்.