போயஸ்கார்டன் இல்லத்தில் தன்னை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெ.வின் அண்ணன் மகள் தீபா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 11ம் தேதி காலை தீபா, ஜெ. வாழ்ந்து வந்த போயஸ்கார்டன் இல்லத்துக்கு சென்றார். அங்கு அவரின் சகோதரர் தீபக்கும் இருந்தார். ஆனால், தன்னை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை எனவும், அங்கு காவலுக்கு இருக்கும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தினர் தன்னை தாக்கியதாகவும் தீபா புகார் கூறினார். மேலும், சசிலாவோடு சேர்ந்து கொண்டு தனது சகோதரர் தீபக் சதி செய்கிறார் எனவும், அவர்தான் தன்னை அங்கு வர சொன்னதாகவும் கூறினார்.
அதுமட்டுமில்லாமல், தனது அத்தை வாழ்ந்த போயஸ்கார்டன் வீடு தங்களுக்கு சொந்தம் எனவும், அதை சசிகலா மற்றும் தினகரன் தரப்பு பறிக்க முயல்வதாகவும் புகார் கூறினார். அதன் பின் ஒருவழியாக போலீசார் அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், இன்று காலை சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தீபாவின் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் ஒரு புகார் மனு அளித்தனர். அதில், கடந்த 11ம் தேதி போயஸ் கார்டனில், தினகரனின் தூண்டுதலின் பேரில் தீபாவின் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். அவர்களை கைது செய்ய வேண்டும்” என அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.