Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தூய்மை பணியாளர்களை வஞ்சிப்பதா.? தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்..!!

Seeman

Senthil Velan

, வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (15:18 IST)
அனைத்து உள்ளாட்சிகளிலும் தூய்மைப்பணிகளை மீண்டும் அரசே ஏற்று நடத்துவதோடு, அங்குப் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று  என்று தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் தூய்மைப்பணியாளர்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி, 11 மண்டலங்கள் தனியாரிடம் தாரை வார்க்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 4 மண்டலங்களையும் தனியாரிடம் ஒப்படைக்க தி.மு.க., அரசு முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. 
 
இது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கவே வழிவகுக்கும். கடந்த அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகராட்சி தூய்மைப்பணியாளர் பணியிடங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டபோது, அதற்குக் கடுங்கண்டனம் தெரிவித்து, திமுக ஆட்சிக்கு வந்தால் பணியாளர்கள் அரசுப்பணியில், பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். 
 
ஆனால், தேர்தலில் வென்று முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற பின் இன்று வரை அதை நிறைவேற்ற மறுத்ததுடன், மீதமுள்ள 4 மண்டலங்களையும் தனியாரிடம் ஒப்படைப்பதென்பது வாக்களித்து ஆட்சியில் அமர்த்தியவர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம். போற்றுதற்குரிய பணியாற்றி வந்த மாநகராட்சி, நகராட்சிப் பணியாளர்களை, குறைந்த சம்பளத்தில் தற்காலிகப் பணியாளர்களாகவே வைத்திருந்து, உழைப்பினை உறிஞ்சிவிட்டு, தற்போது திடீரெனப் பணி நீக்கம் செய்ததென்பது அவர்களின் எதிர்காலத்தை இருளாக்கும் கொடுங்கோன்மையாகும். 
 
சமூக நீதி எனப்பேசி அரசியல் செய்யும் தி.மு.க., அரசு, சமூகத்தின் விளிம்பு நிலையிலிருக்கும் பணியாளர்களை வஞ்சித்ததோடு, அவர்களது போராட்டங்களை அதிகாரத்தின் துணைகொண்டு அடக்கி, ஒடுக்கி குரல்வளையை நெரிக்க முயல்வது வெட்கக்கேடானது. இதுதான் தி.மு.க., அரசு கட்டிக்காக்கும் சமூகநீதியா? 

 
அனைத்து உள்ளாட்சிகளிலும் தூய்மைப்பணிகளை மீண்டும் அரசே ஏற்று நடத்துவதோடு, அங்குப் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்து, உரிய ஊதியம் வழங்க வேண்டும், என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவர்களை நான் மிரட்டவில்லை.! பாஜகவுக்கு எதிராக பேசினேன்.! மம்தா பானர்ஜி..!