குடிகாரர்களுக்கு மது சப்ளை செய்யும் மது ஆலைகளுக்கு ஒரு நாளைக்கு 3 கோடி லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யும் தமிழக அரசு பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்ய முடியாதது கண்டனத்துக்குரியது என்று மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வரும் நிலையில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தண்ணீர் அரசியல் செய்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அந்த வகையில் பொதுமக்களுக்கு தண்ணீர் தராத தமிழக அரசை கண்டித்து சென்னை வில்லிவாக்கம் பகுதியில் மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் தலைமையில் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தின்போது கையில் காலிக்குடத்தை ஏந்தி பேசிய தயாநிதி மாறன், 'மழை பெய்யவில்லை அதனால் தண்ணீர் இல்லை என முதல்வர் எடப்பாடி கூறுகிறார். மழை பெய்யவில்லை என்பதுதான் எல்லோருக்கும் தெரியுமே? தண்ணீர் பிரச்சனைக்காக எட்டு வருடங்களாக என்ன செய்தீர்கள். மது ஆலைகளுக்கு தினமும் 3 கோடி லிட்டர் குடிநீர் சபளை செய்கின்றார்கள். அந்த தண்ணீரை சென்னை மக்களுக்கு கொடுத்தாலே சென்னையின் தண்ணீர்க்கஷ்டம் தீர்ந்துவிடும்' என்று கூறினார்.
தயாநிதி மாறனின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள நெட்டிசன்கள், தமிழகத்தில் இருக்கும் பல மது ஆலைகளுக்கு திமுகவினர்களே சொந்தக்காரர்களாக இருப்பதாகவும், தயாநிதி மாறன் அவர்களிடம் கூறி தண்ணீர் கஷ்டம் தீரும் வரை மது உற்பத்தியை நிறுத்த சொல்லலாமே! என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.