அரபிக்கடலில் புதிய புயல் ஒன்று தோன்றியுள்ளதாகவும், இந்த புயலுக்கு சாகர் என்று பெயரிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இந்த புயல் காரணமாக தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஏடன் வளைகுடாவின் கிழக்கு பகுதியில் இருந்து 390 கி.மீ தொலைவில் சொகோட்ரா தீவுகளின் வடமேற்கே 560 கி.மீ தொலைவில் சக்திமிக்க புயல் ஒன்று மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘சாகர்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் அடுத்த 12 மணி நேரங்களில் வலுவடைந்து, மேற்கு நோக்கி நகரக்கூடும் என்றும் அதனை தொடர்ந்து தென்மேற்கு திசை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஏடன் வளைகுடா, அதை ஒட்டிய மத்திய மேற்கு, அரபிக்கடலின் தென்மேற்கு பகுதிகள் மற்றும் இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட 5 தென்மாநிலங்களில் உள்ள மீனவர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக மணிக்கு 70-80 கி.மீ வேகத்திலும் அதிகபட்சமாக 90 கிமீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.