டானா புயல் முன்னெச்சரிக்கையாக ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வளிமண்டல காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது என்றும், இது டானா புயலாக மாறி ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது மேற்கு வங்கத்திலிருந்து 770 கிலோமீட்டர் தொலைவிலும், வங்கதேசத்திற்கு தென்கிழக்கு 740 கிலோமீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், டானா புயல் தீவிர புயலாக வலுப்பெற உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.