கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு வங்கக் கடலில் இன்னும் மூன்று மணி நேரத்தில் ஃபெங்கல் புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், சற்றுமுன் புயல் உருவாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வர வாய்ப்பு உள்ளதாகவும், எனவே தமிழக கடற்கரை ஓர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்ததால் தற்போது மிகவும் வலுவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. நேற்று இந்த புயல் இலங்கை தரைப் பகுதியை தொட்டதால் வலு குறைந்ததாகவும், புயல் உருவாக வாய்ப்பு இல்லை என கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வலுவடைந்து புயலாக மாறியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்றும், புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மை படையினர் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.