கொரோனா காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்ட நிலையில் நடப்பு செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாக நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக கல்லூரிகள் இயங்காமல் உள்ள நிலையில் அனைத்து பாடங்களும் ஆன்லைன் மூலமாகவே நடந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் வழங்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி சென்று படிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடைபெறுமா அல்லது ஆன்லைன் மூலம் நடத்தலாமா என்பது குறித்து பல்கலைகழகங்கள் ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அனைத்து பல்கலைகழகங்களிலும் செம்ஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த உயர்கல்வித்துறை விரைவில் அறிவிக்க உள்ளதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.