கடந்த சில ஆண்டுகளாக, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் நிகழ்வு தொடர்கதை ஆகி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளை மீனவர் சங்கங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டு வருகின்றன.
ஆனாலும், கைது நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருவது மீனவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இன்றும் எட்டு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தி மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெடுந்தேவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த எட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களுடைய இரண்டு விசைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட எட்டு மீனவர்களிடம் விசாரணை நடத்தியதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள், கைதான மீனவர்களை மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.