நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானையை கருணைக் கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சுகவனேஸ்வரர் கோவிலில் பராமரிக்கப்பட்டு வந்த ராஜேஸ்வரி என்கிற யானை நோய்வாய்ப்பட்டு எழுந்து நடக்க முடியாமல், படுத்த படுக்கையாக கிடந்தது. மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்தும் எந்த பலனும் இல்லாததால், அந்த யானையை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று வழக்கு நடைபெற்றபோது, ராஜேஸ்வரி யானையை கருணை கொலை செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர். மேலும், யானையின் உடல்நிலை பற்றி 48 மணி நேரத்திற்குள் அறிக்கை அளிக்கும்படி அரசு கால்நடை மருத்துவருக்கு அவர்கள் உத்தரவிட்டனர். அதேபோல், மருத்துவ அறிக்கை கிடைத்த பின், விதிகளை பயன்படுத்தி யானையைக் கருணை கொலை செய்ய வேண்டும் என அவர்கள் தீர்ப்பில் கூறினர்.